சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) இருந்து மாற்றி, புதிய ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருப்பது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 26 விமான நிலையங்களின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் விரிவாக்கத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவது கவனம் பெற்றுள்ளது.
விஜய் சொன்னது என்ன?
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சிக்கு உயர்தர சர்வதேச விமான நிலையம் அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். பயணிகள் எண்ணிக்கையில் சென்னை விமான நிலையம் தேசிய அளவில் 6-வது இடத்திற்குச் சரிந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் ஆண்டு பயணிகள் கையாளும் திறன் தற்போது 2.7 கோடியாக உள்ளது. நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்தால் இது 3.5 கோடியாக உயரும். ஆனால் 2025-26 நிதியாண்டில் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 2.30 கோடியாக மட்டுமே இருந்ததாக விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை விமான நிலையத்தின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் எதிர்கால மேம்பாட்டை தற்போதைய இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து புதிய ஆபரேட்டருக்கு மாற்றுவது குறித்து காலக்கெடுவுடன் முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
விஜய்க்கு எதிர்ப்பு
விஜய்யின் இந்தக் கடிதம் வெளியானதும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, புதிய தனியார் ஆபரேட்டரிடம் ஒப்படைப்பது தீர்வாகாது என்பது எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை அல்ல என்று தெரிவித்துள்ளார்.
விமான நிலைய பராமரிப்பில் தனியார் பங்களிப்பைக் கொண்டுவருவது குறித்தே தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாகவும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொதுச் சொத்துகளை முழுமையாகத் தனியார்மயமாக்குவதை தமிழக அரசு ஆதரிக்காது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு திட்டம் என்ன?
விஜய்யின் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்தான், மத்திய அரசின் National Monetisation Pipeline 2.0 (NMP 2.0) திட்டத்தின் கீழ் 26 விமான நிலையங்களின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் விரிவாக்கத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 26 விமான நிலையங்களும் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளவை. தனியார் முதலீட்டை ஈர்த்து அவற்றின் மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அவை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
26 விமான நிலையங்களும் மூன்று தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, 2025-26 முதல் 2029-30 வரையிலான 5 ஆண்டுகளில் ஏலம் விடப்பட உள்ளன. முதல் கட்டமாக 11 விமான நிலையங்களுக்கான ஏல நடைமுறையைத் தொடங்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ஒருபக்கம் சென்னை விமான நிலையத்தின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் எதிர்கால மேம்பாட்டை புதிய ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மறுபக்கம், 26 விமான நிலையங்களின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் விரிவாக்கத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், விஜய்யின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தையும் தனியார் ஆபரேட்டரிடம் மத்திய அரசு ஒப்படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், சென்னை விமான நிலையத்தை புதிய ஆபரேட்டரிடம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
