இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பெயர் தற்போதைய டெல்லி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது பெயர் முந்தைய எஸ்.ஐ.ஆர். (SIR) வாக்காளர் பட்டியலில் எங்கே உள்ளது? என்று திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று இடங்களின் பழைய எஸ்.ஐ.ஆர். பதிவுகளில் தேடியும் ஞானேஷ் குமாரின் பெயர் கிடைக்கவில்லை என்று சாகேத் கோகலே கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தற்போது வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய SIR வாக்காளர் பட்டியலுடன் தற்போதைய வாக்காளர்களின் விவரங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு வருகின்றன.
இதில் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, அவரது மகள் பிரதிபா அத்வானி, மருமகள் கீதிகா ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்வானியின் மகன் ஜெயந்தின் விவரங்கள் மட்டும் முந்தைய பட்டியலுடன் பொருந்தியுள்ளன.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் ஆகியோருக்கும் SIR தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான டாக்டர் சுக்பீர் சிங் சந்து (எஸ்.எஸ். சந்து) மற்றும் அவரது மகன் தமன்பீருக்கும் வாக்காளர் விவரங்களில் ஏற்பட்ட பொருத்தமின்மை காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே, பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட், அவரது மனைவி வனிதா சூட், தாயார் கமலேஷ் சூட், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, அவரது மனைவி சுனிதா திவேதி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அவரது மனைவி சீமா சிசோடியா, மகன் மீர் சிசோடியா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் தேசாய், மைக் தேசாய், சாக்ஷி தேசாய், சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் மனைவி ஷீபா பிரிட்டாஸ், மகன் ஆனந்த் பிரிட்டாஸ், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய மீன்வளத்துறை செயலாளர் அபிலக்ஷ் லிகி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் கே. சஞ்சய் மூர்த்தி ஆகியோரது பெயர்களும் நோட்டீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் வாக்காளர் பதிவு குறித்து திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞானேஷ் குமாரின் பெயர் தற்போது டெல்லி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவரது பெயர் முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததற்கான விவரங்களைப் பெற முடியவில்லை என்று சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் முந்தைய SIR பதிவுகளில் “Gyanesh Kumar, son of Subodh Kumar” என்ற விவரங்களைக் கொண்டு தேடியதாகவும், மூன்று இடங்களிலும் பதிவு கிடைக்கவில்லை என்றும் கூறி அதற்கான screenshots-ஐ அவர் வெளியிட்டுள்ளார்.




இதனைச் சுட்டிக்காட்டிய சாகேத் கோகலே, “ஞானேஷ் குமாரின் தற்போதைய வாக்காளர் பதிவு எந்த மாநிலத்தின் முந்தைய எஸ்.ஐ.ஆர். பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது? அவர் 2002/2003-ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தாரா? முந்தைய வாக்காளர் பட்டியலுடன் அவரது பெயரை இணைக்க முடியவில்லை என்றால், அவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
