அமித்ஷா, ஆளுநருக்கு எதிராக பேசுவீர்களா? – ஆதவ் அர்ஜுனாவுக்கு சிபிஎம் சரமாரி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

ஊழலுக்கு எதிரான வழக்குக்கு அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிற ஆளுநருக்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் பேசுவார்களா என சிபிஎம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி இன்று (செப்டம்பர் 21) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த காலத்தில் நடந்த ஊழல் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஊழலுக்கு எதிராக எல்லா காலங்களிலும் நெஞ்சம் நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

ADVERTISEMENT

ஊழல் செய்தவர்கள் மீது தமிழக அரசு உறுதியாக எடுக்கிற நடவடிக்கைக்கு நிச்சயம் நாங்கள் வந்து ஆதரவாக இருப்போம், உறுதுணையாக இருப்போம். ஆனால் கேள்வி என்னவென்றால், கடந்த கால ஊழல் குற்றச்சாட்டிற்கான அமைச்சர்களின் மீதான வழக்குக்கு அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது யார்? ஆளுநர்.

ஊழலுக்கு எதிராக நெஞ்சம் நிமிர்த்தி பேசுகிற ஆதவ் அர்ஜுனா அவர்கள், ஆளுநருடைய இந்த நடவடிக்கைக்கு எதிராக பேசுவாரா? ஊழலுக்கு எதிரான வழக்குக்கு அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிற ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாட்டினுடைய அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பேசுவார்களா? பேச வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிரான முழுமையான நடவடிக்கை.

ADVERTISEMENT

இன்னும் நான் சொல்லுகிறேன், இப்பொழுது நீங்கள் நிறுத்தியிருக்கிற இரண்டு வேட்பாளர்களும் ஊழலுக்கு எதிராக என்றைக்காவது பேசியிருக்கிறார்களா? ஊழலுக்கு எதிராக பேசுவது, நடவடிக்கை எடுப்பது என்றால் இன்றைக்கு இடதுசாரிகளுடைய வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிற சுகந்தி, லட்சுமணன் இவர்கள் இரண்டு பேருடைய அரசியல் வாழ்க்கையைப் பாருங்கள். ஊழலுக்கு எதிராக, நேர்மையான அரசியலுக்காகத் தங்கள் வாழ்க்கை முழுமையையும் செலவிட்டவர்கள்.

நான் ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன், ஊழலுக்கு எதிரான அரசியலின் பக்கம் நீங்கள் நிற்பதாக இருந்தால் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்கிற முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிராகத் துணிந்து நிற்பது.

ADVERTISEMENT

நீங்கள் நிறுத்தியிருக்கிற இரண்டு வேட்பாளர்களும் அவர்கள் வாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக இதற்கு முன்பு பேசியதற்கான ஆதாரத்தை நீங்கள் ஏதாவது வெளியிடுங்கள் பார்ப்போம். எனவே, ஊழலுக்கு எதிரான உங்கள் அரசியல் பயணம் உண்மை என்றால் இடதுசாரி வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என தெவிரித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share