ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் திமுக ஆட்சி என்ன செய்தது? தவெக அமைச்சர்கள் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

Shocking Details of the Gem Veeramani POCSO Case

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் மூடி மறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு வீடியோ ஆதாரங்களுடன் புகார் ஒன்றை அளித்தார். அதில் 85 வயதான ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி தொடர்பான பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் வீரமணி கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகளான சாந்தி மற்றும் மனோகரன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டும் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனத் தவெக அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் இதை மூடி மறைத்திருக்க முடியாது. இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். கண்டிப்பாக அவருக்குத் தெரிந்துதான் இது நடந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது; ஜனநாயகப் பூர்வமாக இருக்கிறது. இந்த உறுதியான கூட்டணியில் ஜனநாயகம் என்பது என்னவென்றால், எங்கள் மீது என்ன விமர்சனம் வேண்டுமானாலும் தோழர் சண்முகம் வைக்கலாம், அது அவர்களின் உரிமை. ‘சிஎம்-க்கு தெரியாமல் அரசாணை வருகிறதா?’ என்று அவர் கேட்கும் நோக்கம் என்னவென்றால், ‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டும் என்று நீங்கள் சேர்ந்துதானே முடிவெடுத்தீர்கள்?’ என்கின்றார். ஆமாம், ஆனால் அதன் தொடர்ச்சியாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அங்கிருக்கும் மக்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரின் கருத்துகளைப் பெறும்போது, அவர்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு உள்ளது. இன்று வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், ‘நான் எடுத்ததுதான் முடிவு, நான் கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவேன்’ என்று அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் நாங்கள் அல்ல. அனைவரின் பேச்சுவார்த்தைக்கும் கருத்துகளுக்கும் செவி கொடுக்கக்கூடிய ஆட்சியாளர்கள்தான் நாங்கள்.

எந்த முடிவாக இருந்தாலும், பெரிய அதிகாரிகள் மீது புகார் இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு இது உறுதியான கூட்டணி. அவர்கள் தனியாக வேட்பாளர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர்; அவர்களுக்கும் எங்களது வாழ்த்துகள். ஜனநாயகத்தில் இது நல்லதுதான். அவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்கிறார்கள், நாங்கள் எங்களைச் சுயபரிசோதனை செய்கிறோம்.

ADVERTISEMENT

கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஊடகங்களில் ஜெம் கிரானைட் வீரமணி மீதான வழக்கு மிகத் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. அது மிகவும் கொடூரமான வழக்கு. இந்த போக்சோ வழக்கில் தோழர்களின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆட்சிக் காலத்தில் அது மூடி மறைக்கப்பட்டது; அதை அவர்கள் கண்டிக்கிறார்களா இல்லையா? இதை நான் கோபமாகக் கேட்கவில்லை. அவர்களின் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும் அல்லவா? கடந்த ஆட்சியில் ஏன் இப்படிப்பட்ட கொடூரமான வழக்கை மறைத்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் நானும் ஜனநாயகவாதி, நானும் கம்யூனிச வகுப்பில் பாலன் இல்லத்தில் இருந்து வந்தவன்தான். அவர்கள்தான் கேள்வி கேட்கக் கற்றுக்கொடுத்தார்கள்,” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share