நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan) தமது பதவியை இன்று ஜூலை 25-ந் தேதி ராஜினாமா செய்துள்ளார்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக (MBBS) தேசிய தேர்வு முகமையால் (NTA) கடந்த மே 3-ந் தேதி அன்று இளநிலை நீட் (NEET-UG 2026) தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலம் சிகார் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு நடப்பதற்கு முன்பே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ வினாத்தாளுடன் கசிந்த வினாத்தாள் பெருமளவு ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பும் மாணவர்களின் போராட்டங்களும் வெடித்தன. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, மே 3-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்தது. மேலும் இவ்வழக்கு சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறுதேர்வு ஜூன் 21-ந் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன.
அதே நேரத்தில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, புனே உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக வெடித்தன.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கை: நான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர், ஆசிரியர் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்கு பார்வையைக் கொண்ட கல்வி முறைதான் ஒரு பலமான நாட்டின் அடிப்படை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்துள்ளது.
நாட்டின் இளைஞர்களின் விருப்பங்கள், உணர்வுகள் அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நமது அனைவரின் அரசியல் மற்றும் சமூக வாழ்வின் தார்மீக கடமை.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது; அதற்காக நான் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட்-தேர்வு விவகாரத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதை உடனடியாகக் கவனத்தில் கொண்ட மத்திய அரசு, விசாரணையை சிபிஐ-க்கு (CBI) மாற்றியதுடன், தேர்வையும் ரத்து செய்து மறுதேர்வு நடத்தியது.
அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வு கணினி வழித் தேர்வாக (Computer-based-test – CBT) நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நீட் மறுதேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை தடையின்றி எழுத வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருந்தது. இதற்காக அரசின் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைக்கும் அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இதில் மத்திய அரசுடன் மாநில அரசுகளும், குறிப்பாக மாவட்ட நிர்வாகமும் முக்கிய பங்கு வகித்தன.
மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21-ந் தேதி நீட் மறுதேர்வு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
முதல் நாளிலிருந்து இதற்கான பொறுப்பை நான் ஏற்றேன், இந்தச் சூழ்நிலையிலிருந்து நான் எப்போதுமே பின்வாங்கவில்லை. எந்தவொரு திறமையான மாணவனின் எதிர்காலமும் தேர்வு முறைகளால் பாழாகக் கூடாது; எந்தவொரு மாணவனுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
ஜூலை 16-ந் தேதி வெளியிடப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன, இதில் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பல திறமையான மாணவர்களும் வெற்றி பெற்றனர்.
ஆயினும், இக்காலக்கட்டத்திலும் கூட பல மாணவர்களைத் திசைதிருப்ப பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ள நபர்கள் முட்டுக்கட்டை போட முயன்றது எனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.
நான் எப்போதுமே நமது ஜனநாயகத்தின் பலத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மதித்து வருபவன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவின் வழிகாட்டிகள். நாட்டின் படைப்பாளிகள் மற்றும் எதிர்காலச் சிற்பிகளும்கூட.
கடந்த 10 நாட்களின் நிகழ்வுகளைப் பார்த்து என் மனம் வருத்தமடைகிறது. இது எனது தனிப்பட்ட கவுரம் சார்ந்த பிரச்சினை அல்ல.
இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலமாகும். நாட்டின் இளைஞர் சக்தியை எந்தவொரு குழப்ப வலையிலும் சிக்க விடமாட்டேன்; இதுவே எனது உறுதிமொழியாகும்.
ஜந்தர் மந்தர் பகுதியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உருவாகியுள்ள சூழலால், தேச விரோத சக்திகள் லாபம் அடையாமல் இருக்கவும், நாட்டின் ஒற்றுமை நிலைத்திருக்கவும், இந்தியாவின் ஒரு மாணவனின் எதிர்காலம் கூட சட்டச்சிக்கல்களில் சிக்காமல் இருக்கவும், நமது குழந்தைகள் தங்கள் நேரத்தைப் படிப்பிலும், எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், எனது ராஜினாமா கடிதத்தை மாண்புமிகு பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
பிரதமரின் வழிகாட்டுதல், நம்பிக்கை தொடர்ச்சியான ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சரவையில் உள்ள எனது அனைத்து சகாக்களுக்கும், அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவை என்பதுதான் எனது வாழ்வின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். இதற்காக நான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்.
இறைவன் ஸ்ரீ ஜெகநாத்ஜியின் ஆசியுடன் எதிர்காலத்திலும் பாரத மாதா, ஒடிஷாமக்கள் மற்றும் நாட்டின் இளைஞர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக என்னால் இயன்றவரை என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
