காவிரி நதிநீர் பிரச்சனை (Cauvery Dispute) தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூருவில் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. கர்நாடகா நீர் திறந்து விடாததால், ஆண்டுதோறும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கவில்லை.
இதனிடையே காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை வர தயாராக இருப்பதாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் அனுப்பினார். இதனை ஏற்று ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூரு வருகை தருமாறு முதல்வர் விஜய்க்கு டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே முதல்வர் விஜய் பெங்களூரு சென்று பேச்சுவார்த்தை நடத்த தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் வேதாரண்யத்தில் நேற்று ஜூலை 24-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கர்நாடகா செயல்படுகிறது. இதனால்தான் மேகதாது அணையை கட்டுவோம் என்கிறது. கர்நாடகாவின் இத்தகைய செயல், சட்டவிரோதமானது.
காவிரி பிரச்சனை குறித்து எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் கர்நாடகம், தமிழகம் தனிப்பட்ட முறையில் ஈடுபடக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாருடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது” என்றார்.
பாமக எதிர்ப்பு
இதேபோல பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் முதல்வர் விஜய், பெங்களூரு சென்று பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும். மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.
