14 ஆண்டுகளுக்கு பின் காவிரி பேச்சுவார்த்தை: ஆக.3-ல் முதல்வர் விஜய் பெங்களூர் பயணம்- அமைச்சர் வினோத்

Published On:

| By Mathi

Cauvery Dispute: Tamil Nadu Farmers Oppose Vijay's Talks with Karnataka

காவிரி பிரச்சனை (Cauvery) குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூரு பயணம் மேற்கொள்வதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது. அத்துடன் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். இதனை ஏற்று ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தருமாறு முதல்வர் விஜய்க்கு கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று ஜூலை 24-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், ஆகஸ்ட் 3-ந் தேதி தமிழக ”மக்களின் நலனுக்காக முதல்வர் விஜய் பெங்களூர் செல்கிறார். மேகதாது அணை குறித்து பேசுவாரா இல்லையா? என்பது பின்னர்தான் தெரியும். மேகதாது அணையை கட்ட அனுமதிப்பது இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்றார்.

ADVERTISEMENT

1997-ம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர், சென்னையில் கர்நாடகா முதல்வர் ஜே.எச். பட்டீலுடன் காவிரி நதிநீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் 2012-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சென்று கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து காவிரி நீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக தீர்வு காணப்படவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக- கர்நாடகா முதல்வர்கள் இடையே மீண்டும் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டின் பங்கு என்ன?

காவிரி நதிநீர் பிரச்சனைக்கான தமிழக முதல்வராக இருந்த கலைஞரின் முயற்சியால் 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

காவிரி நடுவர் மன்றம் தமது தீர்ப்பை 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி வழங்கியது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில்

தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீரை கர்நாடகா வழங்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது.

இதன்படி தமிழ்நாட்டுக்கு 177.25 காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

இந்த 177.25 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதையும் உச்சநீதிமன்றம் வரையறை செய்தது.

இதன்படி,

  • ஜூன்- 9.91 டிஎம்சி
  • ஜூலை- 31.24 டிஎம்சி
  • ஆகஸ்ட் – 45.95 டிஎம்சி
  • செப்டம்பர்- 36.75 டிஎம்சி
  • அக்டோபர்- 20.24 டிஎம்சி
  • நவம்பர்- 6.00 டிஎம்சி
  • டிசம்பர்- 3.00 டிஎம்சி
  • ஜனவரி- 2.50 டிஎம்சி
  • பிப்ரவரி- 2.50 டிஎம்சி
  • மார்ச்- 2.50 டிஎம்சி
  • ஏப்ரல்- 2.50 டிஎம்சி
  • மே- 2.66 டிஎம்சி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும்.

நடப்பாண்டில் ஜூன், ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை இன்னமும் கர்நாடகா திறந்துவிடவில்லை. கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை என கைவிரிக்கிறது கர்நாடகா. இந்த நிலையில் தமிழ்நாடு- கர்நாடகா இடையே மீண்டும் காவிரி நதிநீர் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share