காவிரி நதிநீர் (Cauvery) விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் ஆகஸ்ட் 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதுமான நீர் கையிருப்பில் இல்லாததால் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை.
மேலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேகதாது அணை பிரச்சனைக்கு புதிய நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தியும் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் மாதமும் 53-வது கூட்டம் ஜூலை 22-ந் தேதியும் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.
இதில், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் பங்கான 9.91 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், கர்நாடக அணைகளில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை ஆணையம ஆகியவற்றின் கூட்டங்களில் காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் கர்நாடகா நிராகரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது.
இந்த பின்னணியில், தமிழ்நாடு- கர்நாடகா மாநில முதல்வர்களான விஜய் மற்றும் டிகே சிவகுமார் இடையே பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி Deccan Herald நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “கர்நாடகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைத்திருந்தது.
இதனை ஏற்று பெங்களூருவில் ஆகஸ்ட் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் அலுவலகம், டி.கே. சிவகுமாரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கலைஞர், ஜெயலலிதா நடத்திய பேச்சுவார்த்தைகள்
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை கர்நாடகாவிடம் பெறுவதற்கு தமிழக முதல்வர்களாக பதவி வகித்த கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1997-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக கலைஞர் பதவி வகித்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னையில் 1997-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி தமிழக முதல்வர் கலைஞர்- கர்நாடகா முதல்வர் ஜே.எச். பட்டீல் இடையே இப்பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இதன் பின்னர் 2012-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி, பெங்களூருவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மாநில முதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்த போது, கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக முதல்வராக இருந்த சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசிடம் இருந்து உரிய பதில் வரவில்லை.
2021- 26-ல் தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் பதவி காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் சட்டப் போராட்டங்கள் மூலமாகவே தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது முதல்வர் விஜய் ஆட்சியில் மீண்டும் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
