நீட் (Neet Protest) தேர்வு வினாத்தாள் கசிவு, காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் மீதான போலீஸ் அடக்குமுறைகளைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தலைமையில் இன்று ஜூலை 23-ந் தேதி இரவு ‘இந்தியா கூட்டணி’ எம்.பி.க்கள் திடீர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 3 பேருந்துகள் திடீரென காந்தி நினைவகம் நோக்கி புறப்பட்டனர். ஆனால் இந்த பேருந்துகள் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே போலீசார், அப்பகுதியில் 163-வது தடை உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “எங்களது மாணவர்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள்.. அதனால் நாங்களும் வீதியில் நிற்கிறோம். காந்தி நினைவகம் செல்ல முயன்ற எங்களை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பின்னர், காந்தி நினைவகம் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
காந்தி நினைவகத்துக்கு கையில் அரசியல் சாசனப் புத்தகத்தை ஏந்திய படி ராகுல் காந்தி சென்றார். இந்தியா கூட்டணி தலைவர்கள், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரும் பதாகைகளை ஏந்தி சென்றனர்.
தர்மயுத்தம்
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017-ல் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் திடீரென தர்மயுத்தம் என்ற பெயரில் அமர்ந்து தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
டெல்லியில் ராகுல் காந்தி இன்று திடீரென காந்தி நினைவகம் நோக்கி சென்றதும் ஓபிஎஸ்-ன் தர்மயுத்தத்தை நினைவூட்டுதாக தமிழக செய்தியாளர்கள் பேசிக் கொண்டனர்.
