டெல்லியில் பிரதமர் மோடி (Modi) இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி (Rahul Gandhi), பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் திடீரென போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி, காக்ரோச் ஜனதா கட்சியினர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் பேரணி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தலைநகர் டெல்லி போர்க்களமாகி இருக்கிறது.
இந்த நிலையில் இன்று திடீரென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, கேசி வேணுகோபால், கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரஞ்ஜித் சிங் சன்னி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில், “பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தமது கைகளில் விலங்கிட்டு அடையாள போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு பிரதமரிடம் பதில் கேட்கவே அவரது இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம். இந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
இந்தப் போராட்டத்தால் பிரதமர் மோடி இல்லம் முன்பு பதற்றம் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்தும் பிரதமர் மோடி இல்லம் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
