நீட் விவகாரம் : டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் வலுக்கும் போராட்டம்.. பாடகர் அறிவு கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கல்வியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக், ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் 24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், டெல்லியில் சோனம் வாங்சுக் உடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியைத் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லி போராட்டம் மற்றும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி ஆகிய வளாகங்களின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் ஒருவேளை உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது தலைமை தாங்கினார்.

ADVERTISEMENT

இதேபோல் கோவையில், பா.ஜ.க அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு, வி.சி.க, ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் த.மு.எ.க.ச உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் சார்பில் ஒருவேளை உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரத்திலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றும் கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பாடகர் அறிவு, சென்னை தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயில் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக பாடல்களை பாடி திடீர் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share