நீட் மோசடி: ’கரப்பான் பூச்சிகளின்’ 2-ம் நாள் போராட்டம்.. பதற்றத்தில் டெல்லி!

Published On:

| By Mathi

NEET Scam: 'Cockroaches' Protest Enters Day 2... Delhi on Edge

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளைக் கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சியினர் (CJP Cockroach Janta Party) மற்றும் மாணவர்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் இன்று 2-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில் பல மாணவர்களும் தொண்டர்களும் படுகாயமடைந்து டெல்லியின் ராம் மனோகர் லோகியா (RML) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இன்று ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் இளைஞர்களை இப்படி நடத்தக்கூடாது. நாட்டின் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் இல்லை; அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன; இங்குள்ள மாணவர்கள் கல்வி முறையைப் பற்றி மட்டும் அல்ல, தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் புகார் கூறுகின்றனர். இந்தியாவில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று இந்தியாவின் மாணவர்கள்தான் கூறுகிறார்கள். இது நியாயமானது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலக வேண்டும். நான் காயமடைந்த மாணவர்களைச் சந்திக்கப் போகிறேன்” என்றார்.

ADVERTISEMENT

மேலும், ”நேற்று நடந்த நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை. கல்வி மற்றும் தேர்வு முறை கரையான் அரித்துவிட்டது போல் நாசமாகிவிட்டது என்பது முழு நாட்டுக்கும் தெரியும். பிரதமர் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்? மாணவர்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களைத் தாக்குவது போன்ற முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்” என்றும் ராகுல் காந்தி கூறினார்.

மருத்துவமனையில் ஆறுதல்

இவர்களைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மருத்துவமனைக்கு வருகை தந்து, அங்குள்ள மூத்த மருத்துவர்கள் மற்றும் இயக்குநரைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்ததுடன், சிகிச்சையில் உள்ள போராட்டக்காரர்களையும் சந்தித்தார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியின் தலைவர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோருடன் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில்..

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை அடக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த அநீதியைக் கண்டித்த நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கேட்டபோது அவை முடக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஜோதிமணி

மேலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்களையும் அளித்துள்ளனர்.

மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “இன்றும் நாடாளுமன்றத்தில் நுழைவு மற்றும் போட்டித்தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தேன்.

மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து வரும் வேளையில் அவர்கள் மீது மோசமான தாக்குதலை கட்டவிழ்த்து விடும் மோடி அரசு இப்பிரச்சினை குறித்து எங்களைப் பேசவிடாமல் தொடர்ந்து நாடாளுமன்றத்தை
முடக்கி வருகிறது. நாட்டின் எதிர்காலமான மாணவர்கள்பிரச்சனை குறித்து பேசமுடியாது என்றால் பிறகெதற்கு நாடாளுமன்றம்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

சிபிஎம் சு.வெங்கடேசன்

சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன், “அறவழியில் போராடும் மாணவர்களுக்கு எதிராக நேற்று பகலிலும் இரவிலும் இடைவிடாமல் ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், மாணவர் போராட்டம் பற்றி மக்களவை உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்றும் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.

இதனிடையே போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

ஆனால் பாஜக எம்பி கே. சுதாகர் பேசுகையில், காக்ரோச் ஜனதா கட்சியின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோத சக்திகள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

டெல்லியில் 2-வது நாளாக இந்தப் போராட்டம் நீடிப்பதால், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share