டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நேற்று நடத்திய போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் (Actor Prakash Raj), நடிகை சப்னா ஆஸ்மி ஆகியோர் நின்றிருந்த டிரக் வாகனத்தை போலீசார் சூழ்ந்து நின்று கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது அபிஜீத் திப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா கட்சியினரின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் போராட்டம் நடத்திய டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அபிஜீத் திப்கே தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி காக்ரோச் ஜனதா கட்சியினர் பேரணி நடத்தினர். இந்தப் போராட்டத்தை தடியடிகளாலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும், போராட்டக்காரர்களின் மேடைகளையும், கூடாரங்களையும் காவல்துறையினர் பிரித்து அகற்றினர். இருப்பினும் நள்ளிரவிலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் காக்ரோச் அமைப்பினரும் மாணவர்களும் செல்போன் வெளிச்சத்தின் மூலமும், ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் குவிந்து விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு கேட்ட அபிஜீத் திப்கே
காவல்துறையின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த அபிஜீத் திப்கே, ஒரு அமைச்சரின் பதவியைக் காப்பாற்ற மாணவர்களின் ரத்தம் சிந்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் காயமடைந்த மாணவர்களிடம் மன்னிப்புக் கோரிய அவர், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என்றார்.
திரண்ட மாணவர்கள்
காக்ரோச் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தர் வளாகத்தில் திறந்தவெளியிலும் நடைபாதைகளிலும் இரவு முழுவதும் தங்கினர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீட் தேர்வர்கள், தங்களது முதல் டெல்லி பயணமாக ஜந்தர் மந்தருக்கு வந்து, இரவு முழுவதும் தங்கி போராட்டத்தில் பங்கேற்றனர்.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த அரசுப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் குழு ஒன்று முன்கூட்டியே போர்வை மற்றும் தேவையான தயாரிப்புகளுடன் நாடாளுமன்ற வீதி மற்றும் ஜந்தர் மந்தர் நடைபாதைகளில் இரவு முழுவதும் தங்கினர்.
டெல்லி முகர்ஜி நகர் யு.பி.எஸ்சி (UPSC) தேர்வர்கள், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்களும் இரவிலும் களத்தை விட்டு நகராமல் அங்கேயே தங்கி முழக்கங்களை எழுப்பினர்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ், ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டக் களத்திற்கு வந்தார். “நான் இன்றிரவு உங்களுடன் இங்கேயே இருக்கிறேன், பார்த்துக் கொள்வோம்” என்று கூறி மாணவர்களுடன் தரையிலும் போராட்டக் களத்திலேயும் இரவு முழுவதும் தங்கினார். மேலும், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியிலும் (Sansad Chalo) அவர் கலந்துகொண்டு மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பிரகாஷ் ராஜ், நடிகை சப்னா ஆஸ்மி, அபிஜீத் திப்கே உள்ளிட்டோர் ஒரு டிரக் வாகனத்தில் நின்று மாணவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென போலீசார் அந்த டிரக் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர். டிரக் வாகன ஓட்டுநர் அங்கிருந்து ஓட முயன்ற போது அவரையும் விரட்டிப் பிடித்து போலீசார் தாக்கினர்.
அதிர்ச்சி வீடியோ
இது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ள காக்ரோச் ஜனதா கட்சி, “அபிஜீத் திப்கே, கீதாஞ்சலிஜி (சோனம் வாங்சுக் மனைவி), நடிகர்கள் ஷபானா ஆஸ்மி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் காவல்துறையினர் கொடூரமாக தாக்கிய டிரக் வாகனத்தில்தான் இருந்தனர்” என தெரிவித்துள்ளது.
முடங்கிய நாடாளுமன்றம்
இப்போராட்டத்தின் தாக்கம் மற்றும் நீட் விவகாரம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்குக் காரணமானது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன.
