தவெக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆவேசம்-நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில், ஆய்வு மேற்கொள்ள வந்த தவெக எம்எல்ஏ பல்லவியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில், கடந்த 10 நாட்களாகக் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குடிநீரைப் பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தப் புகாரின் அடிப்படையில், திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை எனக் கூறி, அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மக்கள், சட்டமன்ற உறுப்பினர் பல்லவி மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டுத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ADVERTISEMENT

மேலும், சாஸ்திரி நகர் பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளின் போது, பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள மின் கேபிள்கள் சேதமடைந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி உத்தரவிட்டார். மேலும், சேதமடைந்த மின் கேபிள்களைச் சீரமைத்து மின்தடையைப் போக்க மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி விரைந்து தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share