பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பா? – பெ.சண்முகம் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Shanmugam

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலம் அவசர அவசரமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுவதில் உடன்பாடில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “பழனி கோயில் நில விவகாரத்தில் மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது. இதில் மேலிருந்து கீழ்மட்டம் வரை உள்ள பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க பிரமுகர்கள் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கியப் பிரமுகர்களாக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

பழைய வழக்குகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் மறைத்து, நீதிமன்றத்தையே ஏமாற்றி இந்த மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நேர்மையாகவும் முறையாகவும் நடைபெற வேண்டும்.

ADVERTISEMENT

இந்த நில மோசடி விவகாரத்தில் அரசுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை; அதுபோன்ற எந்த விவரங்களும் வரவில்லை. மாறாக, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைக் கொண்டு வந்து வைத்துப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டு மோசடியாகும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரே நேரடியாகத் தலையிட்டு இதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share