பழனி கோயில் நில விவகாரத்தில் தமக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அர. சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி கோயில் நில விவகாரத்தில் என் பெயரை இணைத்து சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை; ஆதாரமற்றவை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுபவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுடனோ, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையுடனோ, கிரயப் பத்திரத்துடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாகவே நானும் அறிந்தேன்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டதை முதலில் கேள்விக்கு உட்படுத்தியதே திமுக தான்; நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் திமுக தான். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என் மீது வீண் வதந்தி பரப்பப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பழனி முருகன் கோயிலுக்குச் செய்யப்பட்ட பணிகள் மக்கள் அறிந்ததே. பக்தர்களின் உரிமைகளுக்காகவும், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் திமுக தொடர்ந்து போராடும்.
அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணையில் உண்மை வெளிவரும். ஆதாரம் இல்லாமல் என் மீது பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
