”துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்” : கைதான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

Published On:

| By Kavi

“என்னை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்” என்று கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக தவெகவினர் கொடுத்த புகாரின் பேரில் மார்க்கண்டேயன் மீது  பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்துக்கு  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  9 மணி நேர விசாரணைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முயன்ற அவர்,  ”விசாரணையின் போது போலீசார் என்னை தாக்க முயற்சித்தனர். துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள் ” என்று கூறினார். உடனே அவரை  போலீசார் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர். 

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்து மார்க்கண்டேயன் கைது தொடர்பாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்,எஸ்.பாரதி,  ”விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்துள்ளனர். இது போன்ற அச்சுறுத்தல்களை எல்லாம் கண்டு பயப்படுகின்ற கட்சி அல்ல திமுக. எமர்ஜென்சியை பார்த்தவர்கள். சிறைச்சாலைக்கு பலமுறை சென்று வந்தவர்கள்.

ADVERTISEMENT

நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறையிலே இருந்த கட்சிதான் திமுக. சட்ட நகலை எரித்ததற்காக மதுரையில் இரண்டு வருடம் தண்டனை பெற்றிருந்த தோழர்கள் எல்லாம் உண்டு. கோவை ராமநாதன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவருக்கு திருமணமாகி இரண்டு மூன்று மாதம் தான் ஆகி இருந்தது. அவரை நான்கு வருடம் தண்டனை கொடுத்து சிறையில் வைத்தனர். இதை எல்லாம் சந்தித்த கட்சி திமுக. 

எம்ஜிஆர் கட்சி துவங்கிய நேரத்தில் அந்த கட்சியினுடைய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் கே.ஏ.கிருஷ்ணசாமி. அப்பொழுது அவர் மேடையில் எம்ஜிஆர் அவர்களை வைத்துக்கொண்டே பேசினார், புரட்சி தலைவர் ஆணையிட்டால் கருணாநிதியுடைய தலையை கொய்து வருவேன் என்று கேஏ.கிருஷ்ணசாமி கூறினார். ஆனால் அவர் மீது தலைவர் கலைஞரோ திராவிட முன்னேற்றக் கழகமோ வழக்கு போடவில்லை இதுபோன்ற நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ளவில்லை. பேரறிஞர் அண்ணாவைப் பற்றி மிக கேவலமாக, கீழ்த்தரமாக காங்கிரஸ்காரர்கள் பேசினார்கள். ஆக ஜனநாயகத்தில் சகிப்பு தன்மை வேண்டும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சிக்கு அது அறவே இல்லை என்பதை இந்த 60 நாளில் நிரூபித்து விட்டார்கள்.

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார், உடனே அவர் கைது செய்யப்பட்டார். இவர் இரண்டாவது எம்எல்ஏ கைது செய்யப்படுறார். அதாவது இது எதைக் காட்டுகிறது என்றால். மற்ற கட்சியில் இருந்தெல்லாம் எம்எல்ஏக்களை பல்வேறு வகையில் கட்சி மாற்றி அவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் திமுகவில் இருக்கிற எம்எல்ஏக்கள் வைரம் போன்ற தொண்டர்களாக இருக்கிற காரணத்தினால் அவர்களை மாற்றி கட்சியில் சேர்க்க முடியாது என்பதற்காக இப்படிப்பட்ட வழிகளை இந்த அரசு கையாளுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கிறது.

ஆறு எம்.எல்.ஏ.க்கள் கட்சிமாறி ஆளும் கட்சிக்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் போவதாக சொல்கிறார்கள். ஆனால் திமுகவில இருந்து யாரும் போகாததனால் இவர்கள் மீது வழக்கு போடுவோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க கூடியவர்கள் ஆகவே சட்ட ரீதியாக அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. அவர் அப்படி பேசி இருந்தால் வழக்கு போடலாம். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தலாம். கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆக மன உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் திமுகவினர் கைது செய்யப்படுகிறார்கள். எங்களை மட்டும் அல்ல சமூக வலைதளங்களில் கருத்து போடுபவர்களை கூட காவல்துறை கைது செய்கிறது. கொலைகள் கொள்ளைகள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. இதை பற்றி விசாரிக்க இந்த காவல் துறைக்கு நேரம் இல்லை திமுகவை ஆதரித்து யாராவது செய்தி போட்டால் உடனே கைது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயனை இந்த காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறி நடந்துள்ளது. இதெல்லாம் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காதது… இதெல்லாம் இப்போது நடக்கிறது.

இதற்கு முன்பெல்லாம் அவதூறு பேச்சிற்காக யாரும் கைது செய்யப்பட்டதில்லை வழக்கு மட்டுமே போடப்படும். என் பேரில் 16 கேஸ் இருந்தது. திமுக தலைவர் மேல 40 கேஸ் இருந்தது. அந்த வழக்குக்கெல்லாம் எங்கள யாரும் கைது செய்யவில்லை. வெற்றி கொண்டான் அவர் மீது 300 கேஸ் போட்டாங்க. இன்று இருக்குற முதலமைச்சர் ஜெயலலிதாவைவிட, எம்ஜிஆரைவிட பெரிய தியாகம் ஒண்ணும் பண்ணிட்டு ஆட்சிக்கு வந்தவரல்ல. உண்மைகளை பேசுகிற போது அது ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை இருக்க வேண்டும். இனியாவது தன்னை திருத்தி கொள்ளவேண்டும்” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share