டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியினர் மத்திய அமைச்சர் நட்டாவிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி விதிமுறைகள், சிபிஎஸ்இ குளறுபடி ஆகியவற்றை கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் உண்ணாவிர போராட்டம் மேற்கொண்ட சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்க்சு வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தநிலையில் இன்று (ஜூலை 20) மழைக்கால கூட்டத்தொடர் கூடிய நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், கைது செய்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்தசூழலில் காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்று மத்திய அமைச்சர் நட்டாவைச் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது.
இதுத்தொடர்பாக சவுரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ”அஷுதோஷ் ரங்கா மற்றும் நான் மதியம் 12 மணி முதல் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் இருக்கிறோம்.
தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்
சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ளோம்.

இது குறித்து உயர் மட்டத்தில் ஆலோசிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இதுவரை எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. கோரிக்கை நிறைவேறும் வரை அமைதியாக எங்கள் போராட்டம் தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோன்று ஜே.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், ”காலை 11:50 மணி முதல் எங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டம் மிகவும் சுமூகமான சூழலில் நடைபெற்றது. அவர்களின் பிரதிநிதிகளுடன் முதற்கட்டமாக வாய்மொழியாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் அவர்கள் என்னிடம் ஒரு எழுத்துப்பூர்வ மனுவைச் சமர்ப்பித்தனர்.
போராட்டக்காரர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு, இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அலுவலகத்தில் அவரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனால் தர்மேந்திர பிரதான் விரைவில் பதவி விலகும் முடிவை எடுக்கலாம் என தகவல்கள் வருகின்றன.
