’பச்சை துண்டு’ திமுக.. அமளி.. பரபரத்த பார்லிமெண்ட்!

Published On:

| By Mathi

DMK's 'Green Towel' Protest Sparks Uproar in Parliament

நாடாளுமன்ற (Parliament) மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளா இன்று (ஜூலை 20) இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, மறைந்த உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், “இரங்கல் குறிப்பை வாசிக்கும்போது அமைதியாக கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்று சபாநாயகர் ஓம் பிர்லா, வேண்டுகோள் விடுத்தார்.

ADVERTISEMENT

ஆனாலும் எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்கள் ஓயவில்லை. இந்த அமளிக்கு இடையே சபாநாயகர் ஓம்பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார்.

அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே நின்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால், “நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அவை; அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்படும்; அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என்று சபாநாயகர் ஓம்பிர்லா மீண்டும் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

ஆனாலும் அமளி தொடர்ந்ததால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல மாநிலங்களவையில் சபை நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கினார்.

ADVERTISEMENT

மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்காக நமது இளைஞர்கள் தெருக்களில் போராடி வருகின்றனர், ஆனால் அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது.. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்ப அங்கும் அமளி உருவானது. இதனால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

’பச்சை துண்டு’ திமுக

காங்கிரஸ் துரோகத்தால் கொதித்து போயிருக்கும் திமுக, அக்கட்சியினர் அருகே ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை வேறு இடங்களுக்கு மாற்ற கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று திமுக எம்.பி.க்களுக்கு வேறு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

திமுக எம்.பி.க்கள் அனைவரும் இன்று நாடாளுமன்றத்துக்கு பச்சை துண்டு அணிந்து வந்தனர். மேகதாது அணை பிரச்சனையில் தனி நடுவர் மன்றம் அமைக்க கோரி மக்களவையில் திமுகவின் டிஆர் பாலு, மாநிலங்களவையில் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இந்த தீர்மானத்தை ஏற்று விவாதம் நடத்த திமுக எம்.பி.க்களும் முழக்கம் எழுப்பினர். மேலும் மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பச்சை துண்டுடன் இன்று திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share