பிரிக்க முடியாதது தி.மு.க-வும் தமிழ்நாட்டு நலனும்; பிரிந்தே இருப்பது இந்திய பெருந்தேசியமும், தமிழ்நாட்டு நலனும்!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை

பாரதீய ஜனதா கட்சி இந்திய அரசமைப்பை, இந்திய அரசியலை இந்துத்துவ கருத்தியலுக்கு ஏற்ப மாற்றியமைப்பதை கடுமையாக எதிர்த்து நிற்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். பாஜக-வை ஒன்றிய ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்ற இந்தியா கூட்டணியின் தூணாக 2019, 2024 தேர்தல்களில் நின்று நூறு சதவீத வெற்றியை தமிழ்நாட்டில் ஈட்டிக் கொடுத்தது தி.மு.க. இன்றைக்கு “எங்கள் வாக்குகள் தி.மு.க-விற்கு சென்றன, தி.மு.க வாக்குகள் எங்களுக்கு வந்தன!” என்று தர்க்கம் செய்பவர்கள், தேர்தல் காலத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்றிருந்தால் தெரியும் எப்படி தி.மு.க தொண்டர்கள் கூட்டணி கட்சிகளை தங்கள் உழைப்பால் தாங்கிப் பிடித்தார்கள் என்பது.

Seat Delimitation

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக 2019-ஆம் ஆண்டே முன்மொழிந்தார் ஸ்டாலின். அவரது பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் துவக்கி வைத்தார். ஏன், 2026 தேர்தலுக்கு சில தினங்கள் முன்னர் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணலில் ராகுல் காந்தியை நம்பிக்கை நட்சத்திரம் என்றார். ஆனால் ராகுல் காந்தி என்ன செய்தார்? தி.மு.க தீய சக்தி என்ற வெற்றுக் கூச்சலை மட்டுமே தன் அரசியல் முழக்கமாக க் கொண்டிருந்த விஜயுடன் இரண்டு மந்திரி பதவிகளுக்காகக் கைகோர்த்தார். அந்த மந்திரி பதவிகளை வைத்துக்கொண்டு காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளர்ந்துவிடுமா? அல்லது தவெக அலங்கோல ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து சீரழியுமா என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

ADVERTISEMENT

தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினை

இப்போது என்ன வேடிக்கை என்றால் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தத்திற்கு தி.மு.க ஆதரவு கொடுக்க க் கூடாது என்று காங்கிரஸும், அவர்களோடு சேர்ந்து தவெக ஆட்சியை தாங்கிப் பிடிக்கச் சென்ற முன்னாள் தி.மு.க கூட்டணி கட்சிகளும் கோரிக்கை விடுக்கின்றன. இதுதான் மிகப்பெரிய நகைச்சுவை.

தொகுதி மறுசீரமைப்பு சட்ட த்தை பொதுவெளியில் வைத்து கொளுத்தியவர் ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறாமல் தடுப்பதில் முன்னின்றது தி.மு.க. ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாட்டு அரசு பிற மாநில முதல்வர்களையும் அழைத்து தொகுதி மறுசீரமைப்பு நியாயமாக நடக்க வேண்டும் என்று கூறியது. கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்தது.

ADVERTISEMENT

இதில் மூன்று நிலைபாடுகள் சாத்தியம். யாருமே ஏற்றுக்கொள்ளாத நிலைபாடு வெறும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்க வேண்டும் என்பது. அப்படி நடந்தால் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்கள், தென் மாநிலங்கள் தங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பெரும் சரிவைச் சந்திக்கும். மக்கள் தொகையை கட்டுபடுத்தி தேசிய நன்மைக்கு உதவிய செயலுக்காக தண்டிக்கப்படும். ஆனால் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதற்குப் பிறகு சில மாநில முதல்வர்கள் ஏற்கனவே கூறுவதுபடி எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் தொகையை அதிகரிப்பார்கள். எனவே இதனைச் செய்ய முடியாது; கூடாது.

இரண்டாவது நிலைபாடு, இப்போதுள்ள அதே எண்ணிக்கையை மேலும் பத்தாண்டுகளுக்கோ, இருபத்தைந்து ஆண்டுகளுக்கோ தொடர்வது. அப்போது எல்லா மாநிலங்களும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி 1976 விகிதாசாரத்திற்குக் கொண்டுவந்து விட்டால் பிறகு தொகுதிகளை அதிகரிக்கலாம். இல்லாவிட்டால் இப்போதுள்ள மாநில வாரி தொகுதி எண்ணிக்கைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யவேண்டும்.

ADVERTISEMENT

மூன்றாவது நிலைபாடு மொத்த தொகுதிகளை அதிகரிப்பது; ஆனால் மாநிலங்களுடைய பிரதிநிதித்துவ விகிதாசாரம் மாறாமல் அதிகரிப்பது. இது ஓரளவு நியாயமான அணுகுமுறை என்றாலும், நபர் எண்ணிக்கை என்ற பரிமாணத்தில் அரசியல் சமன்பாடுகள் மாறலாம். உதாரணமாக பத்தில் இரண்டு பேர் என்பது 20%. அந்த இரண்டு பேர் பெரும்பான்மை ஆதரவைப் பெற மேலும் நாலு பேர் ஆதரித்தால் போது. அதே 20%, மொத்தம் நூறு பேரில் இருபது பேர் என்னும்போது பெரும்பான்மை பெற முப்பத்தோரு பேர் ஆதரவு வேண்டும். அடுத்து ஆயிரம் பேரில் 20% என்றால் பெரும்பான்மை பெற முன்னூற்று ஒரு நபர்களின் ஆதரவு வேண்டும். எனவே மாநில பிரதிநிதித்துவத்தின் சதவீதம் மாறாமல் இருந்தால் மட்டும் அரசியல் வலிமை அப்படியே இருக்கும் என்று கூறமுடியாது.

ஒன்றிய அரசமைக்க பெரும்பான்மையை எதிர்நோக்காத  தி.மு.க உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு மாநில விகிதாசாரம் பாதுகாக்கப்பட்டால் போதும். ஆனால் பெரும்பான்மையை எதிர்பார்க்கும் காங்கிரஸிற்கு அதுமட்டும் போதாது. காங்கிரஸ் அப்படியானால் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கிறது என்று தெளிவாக இல்லை.

ஆனால் காங்கிரஸ் தனக்காக தி.மு.க-வும், பிற மாநில கட்சிகளும் போராடவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதாவது காங்கிரஸ் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர மாநில கட்சிகள் பாடுபட வேண்டும். ஆனால் மாநிலங்களில் காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவு அளிக்காது. மமதா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், பினரயி விஜயன், மு.க.ஸ்டாலின் எல்லோரையும் மாநில அரசியலில்  சகட்டுமேனிக்கு எதிர்க்கும். அவர்களை தான் என்ன செய்தாலும் பாஜக-வை எதிர்க்க தங்களுடன் வந்துதானே தீரவேண்டும் என்று மமதை கொள்ளும்.

Seat Delimitation

இதெல்லாம் தி.மு.க அறியாதது அல்ல. தி.மு.க நவீன தமிழ்நாட்டினை உருவாக்கிய கட்சி. இந்துத்துவ எதிர்ப்பினை விளக்கும் அண்ணாவின் ஆரிய மாயை நூலை தன் கொள்கை விளக்கமாகக் கொண்ட கட்சி. எனவே தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக அது ஒருபோதும் செயல்படாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஏனெனில் அது தமிழ்நாட்டிற்கு வெளியே எந்த மாநிலத்திலும் அரசியல் செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் அதன் கொள்கையே மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான்.

ஆனால் தி.மு.க-வின் முதுகில் குத்திவிட்டு, நடிகர் விஜய் அரசை தாங்கிப்பிடிக்கும் காங்கிரஸ், தி.மு.க-விற்கு அறிவுரை சொல்வதும், கோரிக்கை விடுப்பதும், தி.மு.க பாஜக-வை ஆதரிக்கப் போகிறது என பூச்சாண்டி காட்டுவதும் நல்ல வேடிக்கை. காங்கிரஸ் இன்றைக்கும் இந்திய பெருந்தேசிய கட்சி. அதன் முடிவுகள் எல்லாமே டில்லியில்தான் எடுக்கப்படும். அதற்கு தமிழ்நாடு என்பது மற்றொரு மாநிலம் மட்டும்தான்.

நடிகர் விஜய்க்கு உண்மையிலேயே ஆட்சி செய்யும் பக்குவமோ, அரசியல் ஈடுபாடோ இருக்கிறதா, அவரால் ஏன் ஊடகங்களிடம் பேச முடிவதில்லை, அவர் திரைக்ககதாநாயக பிம்பத்தை முன்னிறுத்தி ஆட்சிக்கு வருவது நல்லதா, அவர் உண்மையிலேயே பாஜக எதிர்ப்பில் அக்கறை உள்ளவரா என்று எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமாக தி.மு.க எதிர்ப்பை மட்டுமே செய்த அவருடன் இரண்டு மந்திரி பதவிகளுக்காக கூட்டணி வைப்பதுதான் காங்கிரஸின் தேசிய அக்கறை என்றால் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். 

ஆனால் காங்கிரஸ் என்ன நினைக்கிறது என்றால், தி.மு.க-வை மாநில அரசியலில் தான் முதுகில் குத்தினாலும், அகில இந்திய அரசியலில் பாஜக எதிர்ப்பில் தன்னோடு இணைய வேண்டும் என்று நினைக்கிறது. அப்படி செய்யாவிட்டால் தி,மு.க – பாஜக கூட்டணி என்று அவதூறு பரப்புவோம் என்று பிளாக்மெயில் செய்கிறது.

எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் கடந்த நூறாண்டுகளாக தமிழ்நாட்டு வரலாற்றை வழி நடத்திச் செல்லும் திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் விளைபொருளான தி.மு.க எதற்காக அப்பட்டமான பெருந்தேசிய சக்தியான காங்கிரஸின் பிளாக்மெயிலுக்கு பயப்பட வேண்டும் என்பதே கேள்வி. காங்கிரஸ் டில்லியிலிருந்து அனுப்பும் கிரீஷ் சோடங்கர்களுக்கும், பிரவீன் சக்ரவர்த்திகளுக்கும் வெண்சாமரம் வீசவா தி.மு.க தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து நிற்கிறது?

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் உண்மையான தீர்வு என்ன என்பது தி.மு.க-விற்கு தெரியும். அதுதான் மாநில சுயாட்சி. அதிகாரங்களை ஒன்றிய அரசில் குவித்துவிட்டு மாநில பிரதிநிதித்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருபோதும் மாநில நலனைக் காக்க முடியாது. அதற்காகத்தான் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து அதன் அறிக்கையைப் பெற்றது தி.மு.க அரசு.

மாநில சுயாட்சி குறித்த காங்கிரஸ் நிலைபாடு என்ன?

தி.மு.க ஜோசப் குரியன் குழு அறிக்கையை நடைமுறைப் படுத்துவதை தன் தேர்தல் அறிக்கையின் முதல் அம்சமாக வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சி தன்னுடைய முதல் இலட்சியமாக கூட்டாட்சிக் குடியரசு உருவாக்குவதை அறிவிக்குமா என்பது முக்கியமான கேள்வி. அது ஒரு பேச்சுக்குச் சொல்லுமே தவிர அதன் கருத்தியல் அடிப்படை இந்திய பெருந்தேசியம்தான். பாஜக-வை எதிர்ப்பதில் காங்கிரஸ் அடைந்துள்ள பலவீனத்திற்குக் காரணமே காங்கிரசின் பிளவுண்ட மனநிலைதான்.

Seat Delimitation

பாஜக இந்துத்துவ பெருந்தேசியத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. வக்ஃப் சட்ட த்தை திருத்தியது. இப்போது புதிய அன்னிய நிதி (FCRA) தொடர்பான சட்டத்தைக் கொண்டுவந்து கிறிஸ்துவ நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்த முயல்கிறது. இந்து கடவுளரை தேசத்தின் உருவகமாக வணங்கும் வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இன்னும் எவ்வளவோ செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். வரலாற்றைத் திரிக்கின்றனர். பாட திட்டங்களை மாற்றுகின்றனர்.

காங்கிரஸ் இந்துத்துவ பெருந்தேசியத்திற்கு பதிலாக பன்மைத்துவ தேசியத்தை முன்வைக்கிறது. ஆனால் காங்கிரஸ் பன்மைத்துவம் மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முதலில் அந்த கட்சிக்குள்ளேயே மாநில தலைமைக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் யார் தலைவர் என்பதை டில்லி மேலிடம்தான் தீர்மானிக்கும்.

காங்கிரஸ் எந்த மாநிலத்தில் வெற்றிபெற்றாலும், யார் முதல்வர் என்பதை அந்த மாநில சட்டமன்றக் குழு தேர்ந்தெடுக்காது. மேலிடப் பார்வையாளர் வருவார். பிறகு எல்லா குழுக்களும் டில்லி செல்லும். காங்கிரஸ் மேலிடமும் முரண்பட்டு நிற்கும். பலத்த இழுபறிக்குப் பிறகு ஒருவர் முதல்வராவார். இதே நடைமுறைதான் பாஜக-விலும். மாநிலத்திலிருந்து எல்லா தலைவர்களும் டில்லி செல்வார்கள். அங்கே பல பஞ்சாயத்துகள் பேசித்தான் கூட்டணியோ, தலைமைப்பொறுப்போ முடிவாகும்.

காங்கிரஸின் இந்த டில்லி மேலாதிக்கப் போக்கால் மாநிலங்களில் வளர்ச்சியடைந்த தலைவர்கள் அனைவரும் அந்த கட்சியிலிருந்து வெளியேறினார்கள். சிலர் தனி மாநில கட்சிகளை உருவாக்கி வெற்றிபெற்றார்கள். மமதா பானர்ஜி, சரத் பவார், சந்திரசேகர ராவ், ஜெகன் ரெட்டி  ஆகிய பலரும் காங்கிரஸிலிருந்து சென்றவர்கள்தான். வேறு பலர் பாஜக-வில் இணைந்துவிட்டார்கள். பல பாஜக மாநில முதல்வர்கள் முன்னாள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான். 

Seat Delimitation

இப்போது பாஜக-விலும் இந்த போக்கு துவங்கியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் எடியூரப்பா தனிக்கட்சி துவங்கி பின்னர் மீண்டும் பாஜக-வில் இணைக்கப்பட்டார். இப்போது தமிழ்நாட்டில் அண்ணாமலை தனிக்கட்சி துவங்கியுள்ளார்.  

பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி இந்திய முரணரசியல் களம் என்பது மாநிலங்கள்தான் என்று புரிந்துகொள்ள மறுக்கின்றன. அது ஏன் என்று நாம் ஆழமாக சிந்தித்தால் ஒன்று புரியும். ஒன்றியத்தின் அதிகாரம் என்பது பார்ப்பனீய சக்திகளின் அரண். மாநில அதிகாரம் என்பது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் களம்.

மன்னராட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் மூலம் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்ட பார்ப்பனீய சக்திகள், பின்னர் சமஸ்கிருதமயமான ஹிந்தி மூலமும், ஆங்கிலம் மூலமும் தங்கள் அதிகாரத்தைத் தொடர்கின்றன. மாநில மொழிகளில் செயல்படும் முரணரசியல் களத்திற்கு அதிக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், தங்களது முன்னுரிமை காணாமல் போய்விடும் என்று அந்த சக்திகள் அஞ்சுகின்றன.

இந்துத்துவத்தால் நேரடியாகவே பெருந்தேசியத்தின் மூலம் பார்ப்பனீய நலனை முன்வைக்க முடியும். காங்கிரஸால் அது முடியாது என்றாலும், அதனை எதிர்த்து போராடவும் முடியாது. அதற்கு சிறந்த உதாரணம் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு (EWS – Economically Weaker Section).

சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்த சட்டம்

பார்ப்பனர்கள் மற்றும் பிற முன்னேறிய வகுப்புகளைச் சார்ந்த பொருளாதரத்தில் நலிவடைந்தோருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி கோட்பாட்டினைக் கொன்று புதைக்கும் செயல் என்றால் மிகையாகாது. ஏனெனில் பொருளாதார நலிவு என்பது பல்வேறு காரணங்களால் நிகழலாம். ஒருவர் ஊதாரியாக, சோம்பேறியாக, சூதாடியாக இருந்தால் சொத்துக்களை இழந்து பொருளாதார நலிவடையலாம். உடனே அவர் மகனுக்கோ, மகளுக்கோ இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமா?

இட ஒதுக்கீடு என்பதன் சமூக நீதி தத்துவம் என்ன? வர்ண ஜாதி அமைப்பால் கல்விலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, கலாசார மூலதனம் இல்லாததால் நவீன கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் முன்னேறிய வகுப்பினருடன் சமமாக பங்கெடுக்க முடியாத சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டின் மூலமாக சம வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதுதான் சமூக நீதி. இது வரலாற்றில் இழைக்கபட்ட அநீதியை சமன் செய்யும் முயற்சியாகும். இதிலும் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசில் கொடுப்பட்ட இட ஒதுக்கீடு, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மண்டல் பரிந்துரைகளை 1990-ஆண்டு வி.பி.சிங் நடைமுறை படுத்திய பிறகே அந்த ஒதுக்கீடு கிடைத்தது. காங்கிரஸ் கட்சி அப்போது அதனை எதிர்த்தது.

மண்டல் எதிர்ப்பிலும் சரி, EWS என்ற மோசடியிலும் சரி பாஜக-விடமிருந்து காங்கிரஸ் அதிகம் வேறுபட்டு நிற்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இதனை நாம் நுட்பமாக ஆராய்ந்தால் காங்கிரஸையும், பாஜக-வையும் இந்திய பெருந்தேசிய நோக்கில் இணைக்கும் பார்ப்பனீய சக்திகளை இனம் காணலாம்.

சுப்ரமணிய சுவாமி டீ பார்ட்டியும், பிரவீன் சக்ரவர்த்தி தூதும்

காங்கிரஸ் தி.மு.க-வுடன் உறவு கொண்டாலும் எப்போதும் அதனை பலவீனப்படுத்த, தனிமைப்படுத்த முயற்சி செய்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் தி.மு.க-வை பிளந்து தனிக்கட்சி துவங்கியதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் தூண்டுதல் இருந்தது என்பதை பலரும் கூறியுள்ளார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரித்தது காங்கிரஸ். ராஜீவ் காந்தி கொலையில் ஏற்பட்ட அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ஆனால் மோசமான ஆட்சி தந்து மக்களின் அதிருப்திக்கு ஆளானார்.

அப்போதும் நரசிம்ம ராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததை எதிர்த்து மூப்பனாரும், சிதம்பரமும் தமிழ் மாநில காங்கிரஸை துவங்கினார்கள். ஒன்றியத்தில் மூன்றாவது அணி ஆட்சியில் தி.மு.க-வுடன் பங்கேற்றார்கள். அப்போது தி.மு.க மீது ஜெயின் கமிஷனில் ஐயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்ற ஒரு கதையாடலை உருவாக்கி தி.மு.க-வை அமைச்சரவையிலிருந்து விலக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. குஜ்ரால் மறுத்ததால் ஆட்சியைக் கவிழ்த்தது.

Seat Delimitation

ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வர உதவினார். ஆனால் தமிழ்நாட்டில் தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தினார். வாஜ்பேயி அதைச் செய்ய மறுத்தார். அப்போதுதான் சுப்ரமணிய சுவாமி டீ பார்ட்டி வைத்து சோனியாவையும், ஜெயலலிதாவையும் சந்திக்க வைத்தார். ஜெயலலிதா வாஜ்பேயி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதில் ஆட்சி கவிழ்ந்தது.

இப்படி மூன்றாவது அணியும் வலுவிழந்து, காங்கிரஸும், அ.இ.அ.தி.மு.க-வும் இணைந்து தி.மு.க-வை தனிமைப்ப டுத்திய நிலையில், தி.மு.க பாஜக-வுடன் கூட்டணி வைத்தது. குறைந்த பட்ச வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து, வாஜ்பேயி கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றது. இதற்கான சூழ்நிலை உருவாக க் காரணம் காங்கிரஸ் தி.மு.க-வை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்த முயன்றதுதான்.

இன்று வரை இந்த பின்னணி தகவல்களை மறைத்துவிட்டு, தி.மு.க பாஜக-வுடன் தானாக விரும்பி கூட்டணி வைத்த து போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சுபரமணிய சுவாமி டீ பார்ட்டியால் விளைந்த அழுத்தம், தி.மு.க மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகள், திணிக்கப்பட்ட கதையாடல் ஆகியவையே அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தி.மு.க-வை பாஜக நோக்கித் தள்ளியது என்றால் மிகையாகாது.

ஆனாலும் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல, தி.மு.க-வின் கருத்தியலோ, கொள்கைகளோ எந்தவிதத்திலும் மாறுபடவில்லை. குஜராத் கலவரத்திற்குப் பிறகு பாஜக-வின் போக்கினை புரிந்துகொண்ட தி.மு.க, மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்றது. அதிலிருந்து தொடர்ந்து காங்கிரஸுடனேயே பயணித்து வந்தது. பாஜக-விற்கு எதிரான அகில இந்திய கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வந்தது.

அந்த சூழ்நிலையில்தான் திடீரென ஒரு பிரவீன் சக்ரவர்த்தி வருகிறார். இவருக்கும் சுப்ரமணிய சுவாமிக்கும் பல பொருத்தங்கள். அவர் ராகுலின் தூதவராக விஜயுடன் பேசுகிறார். தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த பிறகும் விஜய் ஆதரவு கருத்துக்களைப் பேசுகிறார். தி.மு.க – காங்கிரஸ் உறவை பிளக்கிறார். என்ன காரணம்? தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம் கொடுக்கிறது என்பதுதான்.

எப்படியாவது தி.மு.க-வை தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தி களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற முயற்சி மீண்டும் தோன்றியுள்ளது போலத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டு நலனுடனும், தமிழ்நாட்டு வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்த தி.மு.க-வை இந்த சலசலப்புகள் எல்லாம் ஒன்றும் செய்யாது. அதன் வரலாற்றுப் பயணம் தொடரும்.

காங்கிரஸ்தான் பாவம்; பாஜக-வையும் எதிர்த்துக்கொண்டு, மாநில கட்சிகளையும் பகைத்துக்கொண்டு திசைதெரியாமல் விழிக்கிறது. பேச்சில் மட்டும் வீரவசனங்களுக்கு குறையிருக்காது. களத்தில்தான் ராகுல் காந்தி பெருமையாகக் கூறிய அதன் போர்க்குணம் எப்போது வெளிப்படும் என்று தெரியவில்லை. 

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share