மத்திய பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை (Delimitation Bill) நாடாளுமன்றத்தில் திமுக (DMK) ஆதரிக்குமா? என்பது தொடர்பாக அக்கட்சியின் மக்களவை- மாநிலங்களவை குழு தலைவர்களான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்து நாடாளுமன்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான 20 எம்.பி.க்களை தனி அணியாக அங்கீகரித்து அழைத்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சில நிமிடங்கள் “அடையாள வெளிநடப்பு”ம் செய்தன. திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், முஸ்லிம் லீக், இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சிகளுடன் இணைந்து திமுக எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசுக்கு திமுக (DMK) ஆதரவு என பரபரப்பு
இந்த அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்த பின்னர் News18 டிவி சேனலுக்கு பேட்டியளித்த கேரளாவின் புரட்சிகர சோசலிஸ் கட்சியின் எம்.பி. பிரேமச்சந்திரன், ”எதிர்பாரதவிதமாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துவிட்டது” என்றார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் News18 டிவி சேனலுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. திருச்சி சிவா, “தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation) குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித தெளிவான திட்டத்தையும் முன்வைக்கவில்லை… தென் மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தவரை… தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டே அதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அரசின் நிலைப்பாடு குறித்து எங்களுக்குக் கூடுதல் தெளிவு தேவை. எங்கள் கட்சியைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என பதிலளித்தார்.
டிஆர் பாலு- திருச்சி சிவா விளக்கம்
இதன் பின்னர் பின்னர் டி.ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை மசோதா
தென் மாநிலங்களுடைய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்பவே திமுக முடிவு எடுக்கும். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் வடிவம் என்ன என்பது பற்றி இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. அப்படி கொடுக்காத நிலையில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது.
மாநிலங்களின் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அல்லது 50 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிடுகின்றன. மத்திய அரசு இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதா பற்றி மத்திய அரசு எதுவும் சொல்லாத நிலையில் எங்கள் நிலைப்பாட்டையும் சொல்ல முடியாது. அப்படி மத்திய அரசு, விளக்கம் அளித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் சொல்வோம்.
இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசு எதுவும் பேசவில்லை. இது குறித்து முறையான மசோதா அல்லது குறிப்புகள் வழங்கப்படாத நிலையில், அது குறித்து கருத்து சொல்வது முன்கூட்டியே முடிவெடுப்பதாகிவிடும். அரசாங்கம் மசோதாவைத் தாக்கல் செய்து, அதன் வரைவு நகல் வழங்கிய பிறகுதான் திமுக இறுதி முடிவை எடுக்கும்.
மேகதாது அணை
திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் நாங்கள் குரல் எழுப்புவோம். இது தொடர்பாக இரு சபைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேகதாது அணை பற்றி பேசுவதற்கு இருசபைகளிலும் நாங்கள் வலியுறுத்துவோம். சபை தலைவர் அனுமதி மறுத்தாலும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி குரல் கொடுப்போம்.
காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் தீர்ப்பும் எப்போதோ வந்துவிட்டது; ஆனாலும் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா அரசு இப்போதும் முறையாக திறந்துவிடுவது இல்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் கூட உரிய நீரை கர்நாடகா திறந்துவிடுவது இல்லை; அதனால்தான் மேகதாது அணை பிரச்சனைக்காக தனியாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்கிறது திமுக.
இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை திமுக ஆதரிக்கிறது. ஆகையால் இந்த மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இரு சபைகளிலும் நிறைவேற்ற வேண்டும்.
உயர்கல்வி திருத்த மசோதா கொண்டுவரும் போது அதை எதிர்ப்போம். நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.
வெளிநடப்பு ஏன்?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்.பிக்கள் தனி அணியாக, சபாநாயகரால் அங்கீகரிக்கப்படவில்லை. அப்படியான நிலையில் அவர்களை இன்றைய அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைத்தனர். இதற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. நாங்களும் அவர்களுடன் இணைந்து வெளிநடப்பு செய்தோம்.
இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி மட்டுமல்ல.. காங்கிரஸ் கட்சி இருக்கிற எந்த ஒரு கூட்டணியிலும் திமுக இருக்காது என்பது ஏற்கனவே எடுத்த முடிவு. அதன்படியே செயல்படுவோம். இவ்வாறு டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் தெரிவித்தனர்.
திமுக முடிவு ஏன் முக்கியமானது?
தொகுதி மறுவரையறை மசோதாவில் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களின் தொகுதிகளையும் 25 சதவீதம் அல்லது 50 சதவீதம் உயர்த்தும் அம்சத்தை இடம் பெறச் செய்தால் அம்மசோதாவை திமுக ஆதரிக்க வாய்ப்புள்ளது என்பது ஊடகங்களின் யூகச் செய்தி. அப்படி ஒரு சரத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லாமல் போனாலும், வாக்கெடுப்பின் போது ‘வெளிநடப்பு’ செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு திமுக மறைமுகமாக ஆதரவு தரும் என்பதும் ஊடகங்களின் செய்தி. இந்த பின்னணியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரித்துவிட்டதாக இடதுசாரி எம்பி பிரேமச்சந்திரன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருந்தாலும் அதன் நகர்வுகள் கவனம் பெற்றுள்ளன.
