பொறுப்புள்ள அமைச்சர் பொத்தாம் பொதுவாக பேசுவதா? – முன்னாள் அமைச்சர் மூர்த்தி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பழனி கோயில் நில மோசடி மற்றும் பத்திரப்பதிவு துறை ஊழல் புகார்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

பழனி கோயில் நில மோசடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் கடந்த திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்திருந்தது என்றும், இரவு 9 மணி வரை எல்லாம் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுகவில் அமைச்சராக இருந்த மூர்த்தி ‘மினிஸ்டர் கட்டிங்’ எனப் பணம் வாங்கினார் என்றும், அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் இரண்டு பேர் இருந்தனர் என்றும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று மதுரையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டு குறித்து பேசுகையில், “நம்முடைய சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர், இன்றைக்கு நேரடியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், மறைமுகமாகக் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியைப் பற்றிக் பேசுகிறார். கடந்த காலத்தைக் கடந்து இந்த புதிய அரசு பொறுப்பேற்று இப்போது 60 நாட்கள் ஆகிவிட்டன. தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு, இன்றைக்குப் பதிவுத்துறையில் முறைகேடு நடந்ததாகக் கூறுகிறார்.

கடந்த ஐந்தாண்டு காலப் பதிவுத்துறையைப் பொறுத்தவரை, அமைச்சர் என்ற முறையில் நானோ அல்லது எங்களது அரசோ, எந்தவொரு பத்திரத்தையும் ‘இதைப் பதியுங்கள், அதைப் பதியுங்கள்’ என்று ஒருவரிடம் கூடச் சொல்லியிருக்க மாட்டோம். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதேனும் தவறுகள் நடந்திருந்தாலும், அதற்குத் துறை ரீதியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்கள்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ADVERTISEMENT

அதுபோலப் பதிவுத்துறையில் கோயில் நிலங்கள், நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட மற்ற நிலங்களைக் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மாற்றியிருப்பதாகவும், அதுகுறித்துப் புகார்கள் வந்து குவிந்திருப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார். புகார்கள் வரலாம், ஆனால் அந்தப் புகார்களில் எது தகுதியானது என்பதைத் தீர விசாரியுங்கள். அதில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.

அதை விடுத்துப் பொத்தாம் பொதுவாக எல்லா அலுவலகங்களிலும் தவறு நடந்துள்ளது என்று அமைச்சர் கூறுவது சரியா? தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை அலுவலகங்கள் உள்ளன என்று அமைச்சருக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள 589 பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் நேரடியாக நான் ஆட்களைப் போட்டதாகவும், அவர்கள் வாங்கும் பணத்தில் எனக்கு 20 சதவீத கமிஷன் கொடுத்ததாகவும் நேற்று முன்தினம் என் பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஏதேனும் ஒரு அலுவலகத்திற்காவது நான் நேரடியாகப் பேசினேன் என்று அவர் நிரூபிக்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள மந்திரி இப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. எந்தப் பத்திர அலுவலகத்தில், எந்த சர்வே எண்ணிற்கு, யாருக்காக நான் பேசினேன் என்பதை அவர் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். ஏனென்றால், அப்படியெல்லாம் செய்ய முடியாது.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share