தமிழக வெற்றிக்கழக ஆட்சியைக் கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேசப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ஆட்சியைக் கவிழ்க்கப் பேரம் பேசப்பட்டதாகத் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரினர்.
இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. அதோடு இவ்வழக்கில் பலருக்குத் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்தது. எனவே கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரித்துள்ள நிலையில் மனுதாரர்கள் மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கார்த்திகேயன் மூன்று பேரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
