பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் இன்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இந்த 1.40 ஏக்கர் நிலம், 1888-ம் ஆண்டு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குத் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக (Parking lot) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 100 கோடி.
இந்த நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று பல நீதிமன்ற உத்தரவுகளும், அறக்கட்டளையின் ஆவண நிபந்தனைகளும் உள்ளன. கோயிலின் நிலங்கள் பிரிவு அதிகாரிகள், இந்த நிலத்தைப் பதிவு செய்யக்கூடாது என்று ஏற்கனவே பதிவுத் துறைக்குத் தடைகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ய மார்ச் மாதமே முயற்சி நடந்தது. அப்போது பதிவுத்துறை அதை நிராகரித்து, ஏப்ரல் 1-ம் தேதி ‘மறுப்புச் சீட்டு’ (Refusal slip) வழங்கியது. அதன்பின், சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கடந்த ஜூலை 6-ந் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன், இந்த நிலத்தைப் பதிவு செய்து கொடுத்தார். வெறும் ரூ. 2 கோடிக்கு இந்த மதிப்புமிக்க நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி (CB-CID) போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் தொடர்புடைய நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பழனி சார்பதிவாளர் (பொறுப்பு) ஜஸ்டின் மணிகண்டனின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
- நிலத்தை மோசடியாக பதிவு செய்தவர்களில் ஒருவரான சேதுபதி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் பழனி அருகே டி.கே.என். புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
- நிலத்தை மோசடியாக பதிவு செய்த மற்றொரு நபரான வெள்ளைதுரையும் தலைமறைவாக உள்ளார். உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. வெள்ளைதுரை வீட்டில் இருந்து முக்கியப் பத்திரங்கள், வங்கி ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
- பத்திர எழுத்தரான ஒட்டன்சத்திரம் ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக ஜெயப்பிரகாஷின் பூட்டிய வீட்டின் கதவுகளை உடைத்தனர் சிபிசிஐடி போலீசார்.
- பழனி திமுக வட்டச் செயலாளரான லட்சுமணன் என்பவரது வீட்டிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர். இந்த பத்திரப் பதிவில் லட்சுமணன், சாட்சியாக கையெழுத்திட்டுள்ளார்.
- நெல்லையிலும் இந்த மோசடி தொடர்பாக தவெக பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
அவிழ்க்கப்படாத மர்மங்கள்
- ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை, வெறும் ரூ. 2 கோடிக்கு மதிப்பீடு செய்து பத்திரப் பதிவு செய்ய, கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே முடிவெடுத்திருக்க வாய்ப்பில்லை. இந்த மோசடியின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் செல்வாக்கு என்ன என்பது இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு வரவில்லை.
- நிலத்தை விற்றதாகக் கூறப்படும் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்குத் தங்குவதற்கு உதவியது யார் மற்றும் இவர்களை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் குறித்த விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன
- நிலத்தை முறையாகப் பதிவு செய்யக் கூடாது என்று ஏற்கனவே தடையாணை இருந்தும், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதனை மீறி எப்படிப் பதிவு செய்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. “விடுப்பில் இருந்தபோது யாரோ ஆவணங்களை தயார் செய்துவிட்டனர், தான் கவனிக்காமல் பதிவு செய்துவிட்டேன்” என்று கூறப்படும் விளக்கம் உண்மையா அல்லது திட்டமிட்ட சதியா என்பதில் தெளிவு தேவை.
- நெல்லை போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தப்படுவதால், இந்த மோசடி வெறும் பழனியுடன் மட்டும் நின்றுவிடாமல், மாநிலம் தழுவிய ஒரு பெரிய நெட்வொர்க்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சங்கிலித் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் யார் என்பது இன்னும் புலப்படவில்லை.
- நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் நபர்கள், சாதாரண பின்னணி கொண்டவர்களாக இருந்து, எப்படி இவ்வளவு பெரிய சொத்தை வாங்க முடிந்தது? இவர்களுக்குப் பின்னால் பணம் முதலீடு செய்தது யார்? என்பது குறித்த நிதி ஆதாரம் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது
