நீட் தேர்வு முறைகேடுகளுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே இன்று ஜூலை 18-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் தொடங்கி உள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரும் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் முதல் கட்டமாக சமூகப் பொறியாளர் சோனம் வாங்சுக் 21 நாட்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை சோனம் வாங்சுக், போலீசாரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அபிஜீத் தீப்கே கூறுகையில், “நான் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறேன். அனைவரும் பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்; இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளரும். மத்திய அரசு மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது.. அனைவரும் ஜந்தர் மந்தருக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்; நமது இயக்கம் இங்கிருந்து தொடரும், மேலும் ஜூலை 20-ம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் பேரணியைத் தொடர்ந்து நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், “ ஜந்தர் மந்தருக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன; டெல்லி காவல்துறையின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி அமைதியான முறையில் போராடுமாறு கேட்டுக்கொள்கிறோம். சோனம் வாங்சுக் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றார். இதனால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
