அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த விழுப்புரம் வழக்கறிஞர் ஞானசௌந்தரி, தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு லஞ்சம் கேட்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தவெகவைச் சேர்ந்த விழுப்புரம் வழக்கறிஞர் ஞானசெளந்தரி.
ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளதாகவும் ஞானசெளந்தரி குற்றம்சாட்டி இருந்தார்.
இம்மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபிக், இந்த வழக்கில் இருந்து முதல்வர் விஜய் , அமைச்சர் ஆனந்த், தவெக விழுப்புரம் மாவட்ட செயலாளர் என். மோகன்ராஜ் ஆகியோரது பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சட்டத்துறை செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் தவெக விழுப்புரம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி ஞானசௌந்தரி, MS.No.4063/2015, எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
