”தமிழ்நாடு நாளை” தமிழக அரசு தொடர்ந்து கொண்டாடும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் இன்று ஜூலை 18-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்! இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் பின்னணி என்ன?
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்த மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக 1967-ம் ஆண்டு முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா, ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று 2022-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்று முந்தைய அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள். அன்றைய தினம் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றதால், அந்த நாளை மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்ற கோரிக்கை எழுந்ததால் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாள் என 2022-ல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் விஜய்யும் ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என அறிவித்துள்ளார்.
