முதல்வர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதி: சிபிஐ விசாரணை கோரிய மனு டிஸ்மிஸ்!

Published On:

| By Mathi

Madras High Court Dismisses Plea for CBI Probe into 'Plot to Topple' CM Vijay's Govt

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்க்க நடந்ததாக கூறப்படும் சதி மற்றும் குதிரை பேரங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 17-ந் தேதி டிஸ்மிஸ் செய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, சட்டசபை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவர திட்டமிட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ. 35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இப்புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜூன் 30-ந் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், கிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த லஞ்ச பேரம் நடந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜே.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ”ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா விவகாரம் மற்றும் மாநிலத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் பிற குதிரை பேர விவகாரங்களையும் சேர்த்து முழுமையாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இம்மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, “அடிப்படை முகாந்திரம்” இல்லை என கூறி டிஸ்மிஸ் செய்தது.

மேலும், “ வெறும் ஊடகச் செய்திகள், சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட முடியாது. இதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை.

ADVERTISEMENT

தற்போது திருவல்லிக்கேணி காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணை திருப்திகரமாகவே உள்ளது. விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதற்கான எவ்விதமான உறுதியான ஆதாரங்களையும் மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை.

செய்தித்தாள் தலைப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பொதுநல வழக்குகளை (PIL) தாக்கல் செய்யக்கூடாது. இத்தகைய மனுக்கள் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகும்” என்றும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share