மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கிற கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ தொடர்பான செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 17) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம், இடைத்தேர்தலுக்கு முன்பாக பாமகவை சேர்ப்பதற்கான திட்டம் இருப்பதாகத் தெரிகிறதே? பாமகவோடு தவெக இணக்கமாக இருக்கிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”அப்படித் திட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். எல்லோருடனும் தனிப்பட்ட முறையில் இணக்கமாகவும் நட்பாகவும் இருப்பதில் தவறில்லை; கொள்கை வேறு, கொள்கைப் பகை என்பது வேறு. தனிப்பட்ட நட்பு வேறு” என்று பதிலளித்தார்.
அவரிடம் பாஜகவுக்கு எதிராக திமுகவும், தவெகவும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று சொன்னீர்கள். அதுபோன்று பாஜகவை எதிர்த்து பாமக வந்தால் விசிக ஒன்றிணைந்து செயல்படுமா என்ற கேள்விக்கு., ”பாமக-வின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜக-வை ஒட்டியே இருந்ததால்தான் நாங்கள் சில நிலைப்பாடுகளை எடுக்க நேர்ந்தது. நீங்கள் யூகமாகக் கேட்கும் கேள்விக்கு நான் யூகமாகப் பதில் சொல்ல முடியாது. சாதிய, மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கிற கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதில் இன்றைக்கும் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
தவெக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளுக்குள் இணக்கமான சூழல் நிலவுகிறதா?
திமுக மற்றும் தவெகவுடன் விசிக நல்ல இணக்கத்துடன் இருக்கிறது. எங்களுக்குள் எந்தவித இடைவெளியும் இல்லை என்று கூறினார்.
