அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவிகிதமாக உயர்த்தப்படுமா? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்குமார் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஜூலை 23-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் தகுதியான மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை விரைவாக நடத்தப்படும் என்றார்.

ADVERTISEMENT

மேலும், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறை சார்பில் உரிய ஆவணங்கள் மற்றும் தேவையான அறிக்கைகள் சரியான நேரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் காரணமாக, நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 இடங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன. இது அரசுப் பள்ளி மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது என்றார்.

இடங்களின் விபரம் குறித்துப் பேசிய அவர், இந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தம் 13,999 மருத்துவ இடங்கள் உள்ளன என்று கூறினார். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,349 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8,650 இடங்களும் அடங்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மொத்தம் 950 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் 150 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 800 இடங்களும் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன என்று அவர் விளக்கமளித்தார். இறுதி இட ஒதுக்கீட்டுப் பட்டியல் விண்ணப்பங்கள் முடியும் நாளுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இந்த ஆண்டும் கட்டாயம் பின்பற்றப்படும் என்று உறுதி அளித்த அவர், இந்த இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசுகையில், இதுதொடர்பாக முதலமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார் என்றும், தற்போதைக்கு இது குறித்து உறுதியான தகவலைத் தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share