டெல்லியில் நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா நேரில் ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்களைக் கோரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ போராட்டம் நடத்தி வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி ஆகியவற்றை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
லடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 21 ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (ஜூலை 16) திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது வாங்சுக்கிடம் பேசிய ஆ.ராசா, ”உங்களது போராட்டம், கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறோம் ” என உறுதி அளித்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் பேசிய அவர், ”எங்கள் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் சோனம் ஜி-யை சந்தித்து தார்மீக மற்றும் அரசியல் ரீதியான ஆதரவை வழங்குமாறு அறிவுறுத்தினார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுதான், நீட் தேர்வுக்கு எதிராகக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நாட்டின் முதல் அரசு என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.

ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவர் மற்றும் இந்த மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தால், மதிப்பிற்குரிய சோனம் ஜிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்த பட்டினி போராட்டத்துக்கு எங்கள் தலைவரும், திமுகவும் முழு ஆதரவு அளிக்கிறது.
தேர்வுகளை நடத்துவதில் மோடி அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்காதது கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அது இந்த அரசாங்கத்தின் தேசவிரோத மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. இப்பிரச்சினையை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” என்று கூறினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சோனம் வாங்சுக் 21-வது நாளாக தன்னுடைய உண்ணாவிரதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஏறத்தாழ 9½ கிலோ எடை குறைந்து, உடலியல் கூறுகள் அனைத்தும் (Physical parameters & health parameters) சுருங்கிக் கொண்டே வருவதை இன்றைக்கு அவரை நேரிலே நான் சந்தித்துப் பார்த்தபோது தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிற சோனம் எங்களிடத்திலே கேட்டுக்கொண்டார். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஏற்கனவே எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். நாடாளுமன்றம் வருகின்ற 20-ஆம் தேதி கூடுகிற போது இந்தப் பிரச்சனையையும், தமிழகத்திற்கான மேகதாது உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வருவோம்” என்றார்.
மேலும் அவர், ”சோனம் வாங்சுக்கிடம் நீங்கள் வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள், நாம் வேறு மாதிரி போராடலாம்’ என்று சொன்னேன். ஆனால் அவரோ, ‘இல்லை, என்னுடைய உயிர் முக்கியமல்ல. நான் இறந்தாவது இந்த அரசாங்கத்திற்கு கண் திறக்கட்டும். இந்த மண்ணில் ஒரு எழுச்சி ஏற்படும் என்றால் என்னுடைய உயிரைத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன். உறுதியாக இருக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது, எனக்கே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்” என்று குறிப்பிட்டார் ஆ.ராசா
