அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தொடர்பாக சட்டமன்ற செயலாளர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் தொகுதியிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியிலிருந்து சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னாள் அமைச்சர்களான இருவரும் தங்கள் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ஏற்கனவே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா என 4 பேர் அதிமுகவிலிருந்து சென்று தவெகவில் இணைந்தனர்.
இதற்கு எதிராக அதிமுக கொறடா அக்னி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரது ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றது தொடர்பாகவும் அக்னி கிருஷ்ணமூர்த்தி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, இருவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறானது. சபாநாயகர் இயந்திர தனமாக முடிவெடுத்துள்ள இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், ”விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று அக்னி கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 16) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்மனு தொடர்பாக சட்டமன்ற செயலாளர் மற்றும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், இந்த இரண்டு புதிய மனுக்களையும், பிற எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களோடு சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
விஜயபாஸ்கர்கள் ராஜினாமா வழக்கு… சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!
Published On:
| By Kavi
Kavi
சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
