டிஜிட்டல் திண்ணை: எ.வ.வேலு வழக்கு.. விளையாடும் ஆதவ் அர்ஜூனா.. பின்னணி என்ன?

Published On:

| By Minnambalam Desk

Digital Thinnai: Aadhav Arjuna’s Political Play in the E.V. Velu Case

வைஃபை ஆன் செய்ததும், “குழப்பத்தில் பிழையே.. தெளிவு பிறக்கும் பின்னே” என்கிற கவிதை வரிகளை படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. எந்த விவகாரத்தை பத்தி சொல்ல போறீங்க?

உச்சநீதிமன்றத்தில நேத்து எ.வ. வேலு வழக்கில், தமிழக அரசுக்கு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா சரமாரியாக கேள்விகளை கேட்டிருந்தாங்க இல்லையா?

ADVERTISEMENT

அதுல, “எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜரான பின்னாடியும் விசாரணைக்கு ஆஜரானவரை ஏன் ‘தேடப்படும் குற்றவாளி’ன்னு அறிவிக்கனும்? ‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரனும்’னு ஏன் நாங்க உத்தரவு போடனும்?”.. இப்படின்னு பல கேள்விகளை ‘காட்டமாக’வே கேட்டிருந்தாங்க நீதிபதிகள்.

இப்படி நீதிபதிகள் கேட்கிற அளவுக்கு எ.வ.வேலு வழக்கில என்ன நடக்கிறது? அப்படி என்ன அரசுக்கு அவசரம்? அப்படின்னு நாம விஜிலென்ஸ் அதிகாரிகள்கிட்ட விசாரிச்சப்ப, “இந்த கேஸில் அப்பீலுக்கு போறதுக்கு முன்னாடி டிஸ்கஷன் நடந்தது.. அப்ப, “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையனின் உத்தரவுப்படி எ.வ.வேலு விசாரணைக்கு வருவதாக சொல்லி இருக்கிறாரே.. அவர் விசாரணைக்கு வரட்டும்.. அதுவரை நாமும் காத்திருப்போம்.. அதுக்குப் பிறகு சூழ்நிலைகளைப் பொறுத்து நாம இங்கேயே ஹைகோர்ட்டில் மூவ் பண்ணுவோம்.. அப்படி இல்லைனா மட்டும் சட்ட வல்லுநர்களை ஆலோசிச்சுட்டு சுப்ரீம் கோர்ட் போவோம்”னு எங்க ஒப்பீனியனை சொன்னோம்.. ஆனாலும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் உள்ளிட்டவர்களிடம் மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாதான் தீவிரமா டிஸ்கஷன் செஞ்சு சுப்ரீம் கோர்ட்டுக்கு போகனும் மூவ் எடுத்தாரு..

ADVERTISEMENT

இந்த கேஸில், எப்படியாவது எ.வ.வேலு, “தேடப்படும் குற்றவாளி”ன்னு உச்சநீதிமன்றத்தில் இருந்து ஆர்டர் வாங்கனும்னு ரொம்பவே முயற்சித்தார் ஆதவ் அர்ஜூனா.. தனிப்பட்ட முறையிலும் கூட ‘சிறப்பு ஆர்வம்’ காட்டினார் ஆதவ்..

சென்னையில எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜரானப்பவும் மினிஸ்டர் ஆதவ், அடிக்கடி போன் பண்ணி, “விசாரணையில என்ன சொன்னார்?”னு தொடர்ச்சியா கேட்டுகிட்டுதான் இருந்தார்..

ADVERTISEMENT

இன்னும் சொல்லப் போனா, எ.வ.வேலு சிங்கப்பூரில் இருந்தப்ப, டிவிஏசி டைரக்டர் அருண்கிட்ட, “எ.வ.வேலுவை ஏன் சிங்கப்பூருக்கு போய் நாம கைது செஞ்சு அழைச்சு வரக் கூடாது?”ன்னு கூட பிரஸ்ஸர் கொடுத்தார் மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா”ன்னு சொல்றாங்க ப்ரோ..

ஓஹோ.. ஏன் ப்ரோ.. மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எ.வ.வேலு கேஸில் அப்படி என்ன தீவிரமான சோ கால்ட் ஆர்வம்?

இதை பத்தியும் நாம ஆதவ்-க்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப ஏகப்பட்ட விஷயங்களை அடுக்குறாங்க ப்ரோ.. அதாவது, “ஆதவ் அர்ஜூனாதான் இப்ப திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர்.. இதை சிஎம் விஜய்கிட்ட விரும்பி கேட்டு வாங்குனதே ஆதவ்தானாம்.. அதோட, திருவண்ணாமலை எம்.எல்.ஏ. வாக இருக்கிற எ.வ.வேலு சொல்ற எதையும் எந்த அதிகாரியும் கேட்க கூடாதுன்னு மாவட்டத்துல கறாரா ஆர்டரும் போட்டு வெச்சிருக்கிறாராம் ஆதவ் அர்ஜூனா.. இப்படி ஒவ்வொரு இடத்திலும் எ.வ.வேலுவுக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா ஏன் முன்னாடி வர்றாருன்னா.. 2019 லோக்சபா எலக்‌ஷனில இருந்து ஆரம்பிக்கனுமாம்.

திமுகவில சபரீசனுடன் இணைந்து வியூக வகுப்பாளரா ஆதவ் அர்ஜூனா இருந்த டைம் அது.. 2019 லோக்சபா எலக்‌ஷன்ல எம்.பி. சீட்டுக்கு ஆதவ் அர்ஜூனா, சபரீசன் மூலமா மூவ் செஞ்சாரு.. ஆனா இந்த மூவ்வுக்கு மாற்றாக உதயநிதி சில கருத்துகளை அப்ப சொன்னார். ஸ்டாலினும், “லாட்டரி பேமிலியை சேர்ந்தவருக்கு எல்லாம் சீட் கொடுக்க முடியுமா? கட்சிக்காரங்களுக்கே கொடுக்க முடியலையே”ன்னு சொல்லி சீட் தர மறுத்துட்டாரு..

2021-ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர் சில அதிருப்திகளால விசிகவுக்கு போனார் ஆதவ்.

2024-ல் லோக்சபா எலக்‌ஷனப்பவும் எம்.பி. சீட்டுக்கு திருமாவளவன் மூலமாக ஆதவ் அர்ஜூனா முயற்சி செஞ்சாரு.. அப்ப திமுகவிடம் 2 தனித் தொகுதி பிளஸ் 1 பொதுத் தொகுதியை கேட்டார் திருமா.. அந்த 1 பொதுத் தொகுதி ஆதவ் அர்ஜூனாவுக்கு.. கள்ளக்குறிச்சியில ஆதவ் அர்ஜூனா போட்டியிடனும்னு விரும்பினார்.. அதுக்குதான் திமுகவிடம் 1 பொதுத் தொகுதி கேட்டு திருமா அழுத்தம் கொடுத்து பார்த்தார்..

ஆனா திமுகவோ விசிகவுக்கு 2 தனித் தொகுதிகள்தான் கொடுத்தது.. பொதுத் தொகுதி எதுவும் கொடுக்கலை.. இதனால ஆதவ் அர்ஜூனா ரொம்பவே அப்செட்.. இந்த 2024 லோக்சபா எலக்‌ஷன் முடிஞ்ச சில மாதங்களிலேயே விசிகவில் இருந்தும் விலகிட்டார் ஆதவ் அர்ஜூனா.

இப்படி 2019, 2024 எலக்‌ஷன்ல தனக்கு எம்.பி. சீட் கிடைக்கவிடாம செஞ்சதுல எ.வ.வேலுவுக்குதான் முக்கிய பங்கு இருக்குன்னு ஆதவ் அர்ஜூனா நினைச்சுகிட்டு இருக்கிறாரு.. இதுவே எ.வ.வேலு மீதான விரோதமா வளர்ந்திருச்சு.

அதனாலதான் எ.வ.வேலு வகித்த அதே நெடுஞ்சாலை துறைக்கு அமைச்சரான உடன், அவர் மேல வழக்கு பதிவு போடனும்னு ஆதவ் சொன்னார்.. அப்ப கூட, “கரூர், திருப்பூரில் சாலை போடாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் திமுக ஆட்சியிலேயே வெளியே வந்தது.. அப்பவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமைச்சராக இருந்த எ.வ.வேலுதானே சஸ்பெண்ட் செஞ்சாரு.. ஆக்‌ஷன் எடுத்தவரையே குற்றம்சாட்டி இப்ப நாம கேஸ் போட்டா எப்படி நிற்கும்?”னு கூட அதிகாரிகள் சொல்லிப் பார்த்தாங்க.. ஆனாலும், எ.வ.வேலு மேல கேஸ் போட சொன்னதில் தொடங்கி இப்ப சுப்ரீம் கோர்ட் வரைக்கும் ஆதவ் அர்ஜூனாதான் ரொம்பவே பர்சனலாக அதீதமாக ஆர்வம் காட்டுகிறாரு..

திமுகவில ஆதவ் அர்ஜூனா இருந்து சீட் வாங்கி இருந்தாலும் எம்.பி.யாகத்தான் இருந்திருப்பார்.. இப்ப அப்படி இல்லையே.. ‘நிழல் முதல்வர்’னு சொல்ற லெவலில் இருக்கிறாரே”ன்னும் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share