பாஜகவோடு திமுக நாளையே கைகோர்க்கும் நிலை வரலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு விசிகவின் திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர் ஆகிய தொகுதி மண்டல கூட்டம் நேற்றிரவு திருச்சியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”ஏன் திமுகவோடு தொடர்ந்து பயணிக்கிறோம்? பயணித்தோம்? வேறு வழி இல்லாமலா? வேறு வாய்ப்பு இல்லாமலா? அதிமுக பக்கம் போயிருக்க முடியாதா? பாஜக பக்கம் போயிருக்க முடியாதா?
தேர்தலுக்கு முன்பே தவெக அழைத்தபோது போயிருக்க முடியாதா? எந்த பைண்டிங்கும் கிடையாது. நாம் பேசக்கூடிய அரசியலுக்கு நெடுங்காலமாக இயைந்து போகிற ஒரு அரசியலை திராவிட கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்… பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களை முன்னிறுத்தி பேசி வருகிறது.
சமத்துவபுரம் கலைஞர் கண்டறிந்த ஒரு புரட்சிகரமான செயல் திட்டம். அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வெற்றிகரமாக அமைந்தது என்பது வேறு, ஆனால் அந்த சிந்தனை வரவேண்டுமே.
ஊர் வேறு சேரி வேறு என்று காலம் காலமாக பிளவுபட்டுக் கிடக்கிற போது இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கே ஒரு சூழல் இல்லையே என்று சிந்தித்த போது, 60% தலித்துகள், 40% தலித் அல்லாதவர்கள், உங்களுக்கு நல்ல வீடு அரசாங்கமே கட்டித் தருகிறோம், இங்கே வந்து குடியிருங்கள், இணைந்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் அது. அது பெரியாரின் சிந்தனையிலிருந்து தான் தோன்ற முடியும்.
ஆகவே, பெரியார் சிந்தனையும் அம்பேத்கர் சிந்தனையும் ஒன்று. அதை முன்னெடுக்கிற அரசியல் இயக்கமாக இருக்கிற திமுகவோடு இணைந்து பயணிப்பது தான் சனாதனத்தை எதிர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் . எங்கு சுற்றினாலும் நாம் சனாதனத்தை எதிர்த்து நிற்கிறோம். அதனால் பாஜகவை விமர்சிக்கிறோம். அதனால் ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சிக்கிறோம். வேறென்ன எங்களுக்கு பகை இருக்கிறது? அதில் இருக்கிற தலைவர்களோடு நமக்கு நட்பு இருக்கிறது, அது வேறு. ஆனால் கொள்கை அடிப்படையில் நாம் எதிர்க்கிறோம்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிற போது சனாதனத்தை எதிர்க்க வேண்டிய தேவை உருவாகிறது. சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிற போது ஆரியத்தை, பார்ப்பனியத்தை, இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. பாஜக என்பது ஒரு இமயமலையைப் போன்ற அரசியல் இயக்கம். அது மிகப்பெரிய வலிமையைக் கொண்ட ஒரு பேரியக்கம். அந்த இயக்கத்தை நாம் தனி நபராக, தனித்து நின்று எதிர்த்து போராடுவது என்பது வெளிச்சத்துக்கே வந்து சேராது.
ஆகவே, திமுக மாதிரியான அரசியல் கட்சிகள், கட்டாயத்தின் அடிப்படையில் எதிர்க்க வேண்டிய நிலையில் இருந்தாலும், அவர்கள் எதிர்க்கிற வரையில் அவர்கள் நமக்கு நட்பு சக்திகள். பிஜேபியோடு நாளைக்கு ஒருவேளை அவர்கள் கைகோர்க்கும் நிலை வரலாம், அது வேறு. ஏற்கனவே கைகோர்த்து இருக்கலாம், அது வேறு. எதிர்க்கிற போது, அவர்கள் நமக்கு நட்பு சக்திகள், அதனால் அவர்களோடு இருந்தோம். அவர்களோடு சேர்ந்து எதிர்த்தோம். அந்த வலிமை நமக்கு தேவைப்படுகிறது.
இந்த அடிப்படையில் தான் நம்முடைய நிலைப்பாடுகள் இருந்தன. பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும், அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை” என்றார்.
பாஜகவோடு திமுக கைகோர்க்கலாம் என்று கூறிய திருமாவளவன் கருத்து தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ எம்பி சுப்பராயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”இதை நீங்கள் திருமாவளவனிடம் தான் கேட்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி அனுமானங்களின் அடிப்படையில் கருத்து தெரிவிக்காது” என்று கூறினார்.
