புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒடிசா மாநிலம் புரியில் இன்று (ஜூலை 16, 2026) தொடங்கிய உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 120-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் மற்றும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் புகழ்பெற்ற ரத யாத்திரை திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. ஜெகநாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகிய மூர்த்திகளின் தேர்களை இழுப்பதற்காக, புரி நகரின் பிரதான சாலையான ‘படா தண்டா’ (Bada Danda) பகுதியில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

ADVERTISEMENT

பாரம்பரிய முறைப்படி தேரோட்டம் தொடங்கியதும், அலங்கரிக்கப்பட்ட தேர்களின் வடங்களைப் பிடித்து இழுப்பதற்காகப் பக்தர்கள் மத்தியில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி, நூற்றுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.

மயங்கி விழுந்தவர்களில் ஒரு பக்தர் உடனடியாக புரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், நெரிசலில் காயம் மற்றும் மூச்சுத்திணறலுக்கு ஆளான 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களிலும், மாவட்ட அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த ரத யாத்திரையை முன்னிட்டு 13,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமும் கூட்டத்தைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இருப்பினும், இன்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் சவாலான சூழல் நிலவியது. சம்பவத்தை அடுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ரத யாத்திரையின் போதும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டும் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share