புதிய தலைமுறை நெறியாளர் விஜயனை கைது செய்தது தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது,
தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் விஜயன், போலீசார் விசாரணைக்கு சென்ற நிலையில் அவர், கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விஜயனை கைது செய்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையில், ”தமிழக வெற்றி கழகத்தினை சார்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தன்னை சென்னை அரும்பாக்கத்தைச் சார்ந்த யூடியூபர் மற்றும் ஐபிடிஎஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தினை நடத்தி வரும் திருநாவுக்கரசு, மேலும் சில நபர்களுடன் சேர்ந்து சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூபாய்.35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும்,
அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கொடுத்தப்புகாரின் பேரில் டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த வழக்கின் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து “மேகாலயா பிராஜக்ட்” என்ற பெயரிட்டு சுமார் 15 த.வெ.க சட்ட மன்ற உறுப்பினர்களை பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத்தன்மையை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்தது.
இவ்வழக்கின் ஆவண சாட்சியங்களை ஆய்வு செய்த போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் விஜயன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஆட்சேபகரமான வகையில் குறுத்தகவல் அனுப்பி குற்றச்சதியின் போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்.
இது குறித்து விசாரிப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர் விஜயனுக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு நேற்றும் (15.07.2026) இன்றும் (16.07.2026) விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
அவரது செல்போன், வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை அறிய சைபர் பகுப்பாய்விற்கு உட்படுத்த அவரிடமிருந்து பெறப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
