Video: கோவை மாநகராட்சி கூட்டத்தில் அமளி – காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை மாநகராட்சி கூட்டத்தில் செம்மொழி பூங்கா திட்ட முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் மாமன்ற கூட்டத்தில் இன்று கடும் அமளி நிலவியது.

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், சீரான குடிநீர் விநியோகம் வழங்கக் கோரியும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் மற்றும் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர் காலி குடங்களுடன் மாமன்ற கூட்டம் தொடங்கும் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியதும், வார்டுகளில் நடைபெறும் எந்தவொரு மக்கள் நலப் பணிகள் குறித்தும் கவுன்சிலர்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிப்பதில்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மண்டலத் தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என்று கூறி மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

அப்போது திடீரென காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சிலர் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டனர். செம்மொழி பூங்காவில் 40 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, இதற்கு மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் மாமன்றத்தில் கடும் அமளியை கட்டுக்குள் கொண்டு வர கூட்டத்தை பகல் 12 மணி வரை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.

மேலும், அவையை அவமதித்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகிய 5 பேரை இரண்டு மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்து மேயர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் மாநகராட்சி கூட்டம் துவங்கியது. அப்போது பேசிய மேயர் ரங்கநாயகி, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அவையை அவமதிக்கும் வகையிலும், தனது சுயவிளம்பரத்திற்காகவும் செயல்பட்டதால் அவரை மட்டும் இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாகவும், மற்ற 4 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share