அண்டை மாநிலங்களில் அலைமோதும் ‘ரெஸ்டோ பார்’ கலாச்சாரம்: தமிழகத்திலும் அமலாகிறதா?

Published On:

| By Pandeeswari Gurusamy

தென்னிந்திய மாநிலங்களில் சுற்றுலா மேம்பாடு மற்றும் நவீன நகர்ப்புற கலாச்சார வளர்ச்சியின் ஒரு பகுதியாக, உணவகங்களுடன் கூடிய மதுக்கூடங்கள் அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கேரளாவிலும், ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலும் இந்த ரெஸ்டோ பார்களுக்குப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் தற்போதைய நிலை என்ன?

சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் கேரளாவில், கொச்சி, ஆலப்புழா, குமரகம், கோவளம், வயநாடு, மூணாறு போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் இந்த கலாச்சாரம் பரவலாகக் காணப்படுகிறது. அங்குள்ள கடற்கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் மலைப்பிரதேசக் காட்சிகளை ரசித்தபடி மக்கள் உணவருந்தும் வகையில் இந்த பிரீமியம் மதுக்கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு மதுபானங்களுடன் சேர்த்து அந்தந்தப் பகுதியின் பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்படுவது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதேபோல், ஐடி துறையின் மையமாக விளங்கும் கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, மங்களூரு போன்ற பெருநகரங்களில் பப்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களாக மாறியுள்ளன. ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை விசாகப்பட்டினம், விஜயவாடா போன்ற நகரங்களிலும் இந்த கலாச்சாரம் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்:

இத்தகைய மதுக்கூடங்களை நடத்துவதற்கு அண்டை மாநிலங்கள் பல்வேறு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளன. உணவகம் நடத்துவதற்கு உணவுப் பாதுகாப்பு உரிமமும் (FSSAI), மதுபானம் பரிமாறுவதற்கு மாநில கலால் துறையின் முறையான அனுமதியும் தனித்தனியாகப் பெற வேண்டும். உதாரணமாக, கர்நாடகாவில் CL-9 அல்லது CL-7 உரிமங்களும், கேரளாவில் FL-3 உரிமமும் கட்டாயமாகும். கேரளாவில் இதற்கான ஆண்டு உரிமக் கட்டணம் சுமார் 35 லட்சம் ரூபாயாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த மதுக்கூடங்கள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பாலும்; பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலும் அமையக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பாகக் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 21 வயதும், கேரளாவில் 23 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சிசிடிவி (CCTV) கண்காணிப்பு, அவசரகால வழி மற்றும் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ரெஸ்டோ பார்?

இந்தச் சூழலில், தமிழகத்திலும் வருவாயைப் பெருக்கும் நோக்கில் உணவகங்களுடன் கூடிய ரெஸ்டோ பார்களைத் திறக்க அரசு பரிசீலித்து வருவதாகவும், இதற்குத் தனி வரி விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகி விவாதத்தைக் கிளப்பின.

ADVERTISEMENT

அமைச்சர் விளக்கம்:

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், “உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையைச் சீரமைப்பது தொடர்பாக சில ஆலோசனைகளும், விவாதங்களும் நடைபெறலாம். ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்படுவது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வனிடம் மின்னம்பலம் தரப்பில் கேட்டபோது, “போதையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது திமுக, அதிமுக போன்ற கழக ஆட்சிகளின் வரிசையில் தமிழக வெற்றிக் கழக அரசும் மதுபான விற்பனையில் ஆர்வம் காட்டுகிறது. தமிழகத்தில் மாற்றம் என்று சொல்லி தவெக அரசு அமைந்தவுடன், ஏற்கனவே கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள 717 மதுக்கடைகளை முழுவதுமாக மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். ஆனால், அவற்றில் சில பார்கள் தற்போது வரை இயங்குகின்றன. அதேபோல் மூடப்பட்ட 717 மதுக்கடைகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் FL-2 கடைகளை மூட அரசு ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ரெஸ்டோ பார்கள் குறித்து பரிசீலிப்பது மிகவும் ஆபத்தானது. இளம் தலைமுறையைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று கூறும் ஒரு அரசுக்கு இது மாண்பல்ல. போதையில்லா தமிழகத்தை உருவாக்க டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கொள்முதலைப் படிப்படியாகக் குறைத்து, டாஸ்மாக் பார்களை மூடி, நுகர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிப்பதை விடுத்து, தனியார் லாபம் ஈட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே போதைக்கலாச்சாரம் புரையோடி சமூகத்தில் ஒரு சவாலாக உள்ள நிலையில், மது குடிப்பதை மிகவும் சகஜமாக்கும் வகையில் ரெஸ்டோ பார்கள் அமைக்க நினைப்பது பேராபத்தில் போய் முடிவதோடு, விலையும் அதிகரிக்கும். டாஸ்மாக் பார்களுக்கு வெளிப்படையாகச் செல்ல அஞ்சுபவர்கள் கூட ரெஸ்டோ பார்கள் அமையும் பட்சத்தில் அங்கு இயல்பாகச் செல்லும் நிலை உருவாகும். இது பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share