டாஸ்மாக் மதுபாட்டில்களில் தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை கைவிடப்படும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ் இதுகுறித்து கூறுகையில், “டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுபாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழல் வரி இனிமேல் தனியாக வசூலிக்கப்படாமல், மதுபாட்டிலின் மொத்த விற்பனை விலைக்குள்ளேயே (MRP) சேர்க்கப்படும்.
அரசின் ஒரு ரூபாய் வருவாய் கூட தனியார் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. டாஸ்மாக் பாட்டில்களின் விலை நிர்ணயம் தொடர்பாகப் புதிய சட்டத்தையே விரைவில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.”
“அரசின் இந்த உத்தரவையும் மீறி, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்தால் உடனடியாக முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வரை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த 20 ஆண்டுகாலமாக டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வேதனையைத் தீர்க்கத் தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும்,” என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
