“தேர்தலுக்கு முன்பே என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சிகள் நடந்தது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (ஜூன் 28) விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: “இந்தக் கேள்வியை நீங்கள் திமுகவிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் திமுக கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இயங்கி வந்த ஒரு கட்சி. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியை உடைப்பதற்குப் பலரும் முயற்சித்தார்கள். ஏன், என்னை வைத்தே அந்தக் கூட்டணியை உடைக்கும் முயற்சிகளும் நடைபெற்றன. ஆனால், அதற்கு நான் இணங்கவில்லை.
தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னை போன்றவர்களுக்கு இல்லை; அதற்கான வலிமையும் எனக்கு இல்லை. ஆகவே, மதிமுக வெளியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பதில் சொல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் திமுக தலைமைக்குத்தான் உள்ளது.”
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
