வெங்கட நாராயணா நியமனம்: என்ன சொல்கிறார் திருமாவளவன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Thirumavalavan

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த நியமனம் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று பேசப்படுகிறது. ஆனால், அவர் அங்கு தொழில் மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறார்; உண்மையில் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தற்போது அவர் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு என்பது பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டது அல்ல. கடினமான சூழ்நிலைகளில் முதல்வர் விஜய்க்கு உறுதியாகவும் நம்பிக்கையுடனும் நின்றவர் அவர்” எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (ஜூன் 28) திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது வெங்கட நாராயணா நியமனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்: “இந்த நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஏற்கனவே விளக்கம் தந்துள்ளார். வெங்கட நாராயணா முதலமைச்சருக்கு நம்பிக்கைக்குரியவர் என்பதால் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பொறுப்பு என்பது ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு பதவி அல்ல. ஆகவே, முதலமைச்சர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒரு தோழருக்கு அந்தப் பொறுப்பை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘அமைச்சர் நிர்மல்குமாரின் விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “அது அவர்களது உட்கட்சி விவகாரம். அரசு பதவிதான் என்றாலும் கூட, யாரை நியமிப்பது என்ற அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை ” என்று தெரிவித்தார்

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share