திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவியா? அமைச்சர் தந்த பதில்!

Published On:

| By Mathi

Actress Trisha

”தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா நியமனத்தைப் போல முதல்வர் விஜய்யின் தோழி நடிகை திரிஷாவுக்கு (Actress Trisha) துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தந்த விளக்கம் விவாதப் பொருளாகி இருக்கிறது.

மதுரையில் நேற்று ஜூன் 27-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் நிர்மல்குமார். அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயாணவை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது சர்ச்சையாகி இருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ பலர் இந்த விஷயத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று பேசப்படுகிறது, ஆனால் அவர் அங்கு தொழில்தான் செய்து கொண்டிருக்கிறார்; உண்மையில் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டதல்ல. அவர் எந்த பெரிய அப்ரூவலும் (அனுமதி) கொடுக்கப்போவதில்லை; எந்தப் பெரிய முடிவையும் எடுக்கப்போவதில்லை. அவர் டெல்லிக்கான ஒரு பிரதிநிதியாக மட்டுமே இருக்கப் போகிறார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்க்கு கடினமான சூழ்நிலைகளில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் நின்றவர் அவர். இன்று எந்த இடத்திலும் தவறான நபருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பல காலங்களாகப் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன; அவர் மீது மட்டுமல்லாமல், எங்களுடைய தலைவர் மீதும், எங்கள் மீதும் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குப் பல அழுத்தங்கள் வந்தன. அதையெல்லாம் தாண்டி, இன்று அவர் உறுதியாக நிற்கிறார். அவருக்கு இந்தப் பொறுப்பு பெரிய விஷயம் அல்ல.

கர்நாடகா அல்ல.. ஆந்திராவை சேர்ந்தவர்

அதே நேரத்தில், இது ஒரு தவறான நபருக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் அல்ல; அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர், அங்கு தொழில்தான் செய்கிறார். அவர் தமிழ்நாட்டில் வேலை பார்க்கப் போவதில்லை, டெல்லியில் ஒரு பிரதிநிதியாக இருந்து ஒருங்கிணைப்பு (Coordination) பணிகளை மட்டுமே செய்யப் போகிறார்.

ADVERTISEMENT

இதுவரை பல காலங்களில் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்களோ அல்லது அங்கேயே இருந்தவர்களோ இந்தப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள்; எனவே இது பெரிய விஷயம் அல்ல. முன்னதாக இந்தப் பொறுப்பு ஒரு அலங்காரப் பதவியாகவே இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறாதவர்களுக்குச் சும்மா கொடுக்கும் போஸ்டிங்காகவே அது இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் நம்பிக்கையான நபர் தேவை என்பதால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

அவருக்குப் பணமோ அல்லது இந்தப் பதவியோ பெரிய விஷயம் கிடையாது; அவர் ஒரு நம்பிக்கையான நபர். அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று சொல்வது அரசியலுக்காகச் செய்யப்படும் பிரச்சாரம். அவர் பெரிய முடிவுகளை எடுக்கப் போவதில்லை என்பதால், இதை பூதாகரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. முன்னதாகப் பல ஆண்டுகளாக இப்பொறுப்பு ஒரு பெரிய பொறுப்பாகச் சித்தரிக்கப்பட்டது; யாருக்குப் பொறுப்புகள் கொடுக்க முடியவில்லையோ, அவர்களுக்குத் தற்காலிகமாக இது வழங்கப்பட்டது. உதாரணமாக, முன்னதாக தளவாய் சுந்தரத்துக்கு (அதிமுக) இது போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இப்போதுள்ளவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டதில் தப்பு ஏதும் இல்லை. அங்கிருக்கும் துறைகளை அறிந்த, ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யக்கூடிய நம்பிக்கையான நபர் தேவைப்பட்டது; அவ்வளவுதான். இதை இவ்வளவு பெரிதாகப் பேச வேண்டிய அவசியமில்லை” என்றார் அமைச்சர் நிர்மல்குமார்.


திரிஷாவுக்கு (Actress Trisha) துணை முதல்வர் பதவியா?

அப்போது, ”நட்புக்கு இலக்கணமாக உள்ளவங்களுக்கு முதலமைச்சர் விஜய் பதவி கொடுக்கிறார்னா தோழி திரிஷாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமா?” என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பதில்: அப்படி எல்லாம் கிடையாது யார் யாருக்கு என்ன மாதிரியாக இப்ப ஆலோசகர் இருக்காங்கன்னா, கண்டிப்பா எல்லா அரசுகளும் அவங்களுக்கான ஆலோசகர்களை வைத்திருக்கிறார்கள். யார் யாரு வந்து நம்பிக்கையாக இந்த அரசை கொண்டுவருவதற்காக இந்த அரசுடைய கட்சியுடைய கொள்கைகள், கொள்கை தலைவர்கள் அனைத்தையும் முடிவு செய்தவர்கள் ஆலோசகர்கள் இருக்காங்க அதுல எந்த தப்பும் கிடையாது. யார் யாரெல்லாம் எந்த பொறுப்புக்கு பொருத்தமா இருப்பாங்களோ அவங்களதான் இப்ப நியமிச்சிருக்காங்க, யாரும் பொருத்தமில்லாதவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share