மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜூன் 29-ந் தேதி தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
ஒன்றிய அரசு,
- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும்.
- இந்த பொருட்களின் மீது அபரிமிதமாக விதிக்கப்படும் கலால் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும்.
- சமையல் எரிவாயுக்கான மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக நிறைவேற்றியுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்.
- வி.பி.ஜி.ராம் ஜி என்ற புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்குப் பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தியும்,

தமிழ்நாடு அரசு,
- “ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டத் தொகுப்பை அமல்படுத்த முடியாது” என அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
- மாநிலத்தின் உரிமையை பறிப்பதோடு மாநிலத்திற்கு 40 விழுக்காடு நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வி.பி.ஜி.ராம் ஜி திட்டத்தை அமலாக்க முடியாது என்று அறிவிக்க வேண்டும்.
- “காண்ட்ராக்ட், அவுட் சோர்ஸ் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம்” என்ற தவெக-வின் தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
- பயிர் கடன்கள் பெற்றுள்ள விவசாயிகள் அனைவருக்கும் கடன் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 29.06.2926 அன்று தமிழ்நாடு முழுவதும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
பெரம்பலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.பத்மாவதி கலந்து கொள்கின்றனர். மாநில துணைச் செயலாளர்களான எம்.ரவி மத்திய சென்னையிலும், என்.பெரியசாமி விழுப்புரத்திலும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி தென்சென்னையிலும், முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வடசென்னையிலும், மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., திருப்பூரிலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம் கோயம்புத்தூரிலும், டி.ராமசாமி தேனியிலும்,
வை.சிவபுண்ணியம் மயிலாடுதுறையிலும், எம்.செல்வராஜ் திருச்சியிலும்,
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செங்கல்பட்டிலும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் திருவாரூரிலும், சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கிருஷ்ணகிரியிலும் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
