அரசின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்கள் அமைச்சரவை கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும் பங்கேற்பது எப்படி என்று திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் தற்போதைய அரசின் முக்கிய செயல்பாடுகள் பலவற்றிலும் பங்கெடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் திமுக எம்பி வில்சன் இன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் இதர உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் முதல்வர் விஜயின் நெருங்கிய உதவியாளர்களும் நண்பர்களும் ஆவர். அவர்கள் அரசாங்கத்தில் என்ன அதிகாரப்பூர்வ பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகிலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றால் ரகசிய ஆவணங்கள் புழக்கத்தில் இருக்கும் அதிரகசிய தன்மை வாய்ந்த கூட்டங்களில் இருவரும் எந்த தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் விஜய் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார். இத்தகைய நபர்களை இதில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள் அலுவல் விதிகள் மற்றும் அவரது ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
இந்த இருவரின் அதிகாரப்பூர்வ பதவிகளை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எந்த அதிகாரத்தின் கீழ் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் என்பதையும் முதல்வர் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
