VIDEO: துரை வைகோ புறக்கணிப்பு.. வைகோ விளக்கம்!

Published On:

| By Mathi

Why Durai Vaiko Did Not Attend the MDMK General Council? Vaiko Clarifies

மதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று ஜூன் 27-ந் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம் நேற்று ஜூன் 26-ந் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த இரு கூட்டங்களிலும் வைகோவின் மகனும் மதிமுகவின் முதன்மை செயலாளருமான துரை வைகோ பங்கேற்கவில்லை.

இன்றைய பொதுக்குழுவில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு நிறைவேற்றப்பட்ட மதிமுக பொதுக்குழுவில் துரை வைகோ பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

ADVERTISEMENT

இது தொடர்பாக பொதுக்குழுவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக அணியில் 9 ஆண்டுகள்

பா.ஜ.க. ஆதிக்கம் தமிழகத்தில் ஊடுருவக்கூடாது என்பதற்காகவே தி.மு.க. கூட்டணியில் இருந்தோம். 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்ததோடு, அந்த அரசையோ அல்லது முதலமைச்சரையோ விமர்சித்ததில்லை. தி.மு.க. தலைமையை ம.தி.மு.க. பாராட்டி வந்தது. 9 ஆண்டு காலமும் தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவே பேசப்பட்டது.

ADVERTISEMENT

அதிமுக ஆட்சிக்கு ஆதரவு நிலை ஒரு மோசடி

தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. ஆதரவு குறித்துப் பரவலான செய்திகள் வந்தன.
அ.தி.மு.க. ஆட்சிக்கு தி.மு.க. ஆதரவு என்ற செய்தி உலாவியது. இந்த ஆதரவு குறித்து அ.தி.மு.க.வில் சில எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சகோதரி கனிமொழி உள்ளிட்டோர் இந்த ஆதரவு முடிவை ஏற்கவில்லை. இது குறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் தோழர் பேபி கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தை தோழர் சண்முகமும் பிரதிபலித்திருந்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பிலும் கருத்துகள் உலவின. இத்தகைய ஆதரவு முடிவு உண்மையாக இருந்தால் அது அரசியல் மோசடி.

4 தொகுதிகள்தான்..

தி.மு.க. கூட்டணியில் சீட் ஒதுக்கீட்டின் போது, 4 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டுமானால் நான்கு இடங்களுக்குக் கையெழுத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.

தனிச் சின்னம் மறுப்பு

கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அவர்களின் சின்னத்திலேயே போட்டியிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.க.வை மட்டும் தி.மு.க.வின் ‘சூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் நிர்பந்தித்தார்கள். தனிச் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. முயன்றதை தி.மு.க. தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் மு.க.ஸ்டாலின் மீது எந்த குறையும் நான் சொல்லவில்லை.

சுயமரியாதை இழப்பு- கூட்டணியில் இருந்து விலகல்

தற்போதைய சூழலில் ம.தி.மு.க. தனது சுயமரியாதையை இழக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதால் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

அவதூறுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு

தினகரன் ஏட்டில் ம.தி.மு.க. மீது மஞ்சள் வண்ணம் தடவப்பட்ட சொற்களில் அவதூறு வெளியானது. முதல்வர் விஜய்யிடம் ரூ. 50 கோடி வாங்கியதாகப் பொய் செய்தி பரப்பப்பட்டது. வைகோவும் அவர் குடும்பத்தாரும் சம்பாதித்ததாகப் பழி சுமத்தப்பட்டது. ஓஎம்ஆரில் 114 பிளாட்டுகள் வாங்கியதாகப் பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அண்ணா சாலையில் மிகப்பெரிய மாளிகைகள் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவதூறு செய்திகள் தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.

தவெகவுக்கு ஆதரவு

இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தை ம.தி.மு.க. ஆதரிக்கும். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தோடு தோழமை அமையும். அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம், தவறிருந்தால் சுட்டிக்காட்டுவோம். த.வெ.க. கூட்டணியில் ம.தி.மு.க. இணைவது தொடர்பான கேள்விக்கு, அது குறித்து கட்சியின் பொதுக்குழுவே இறுதி முடிவை எடுக்கும்

2 எம்.எல்.ஏ.க்கள் நிலை

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டதாக சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் அறிவித்துவிட்டார். கடையநல்லூர் திமு ராஜேந்திரன், ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். ஆனாலும் மதிமுகவின் கருத்துடன் சட்டசபையில் பணியாற்றுவேன்; தகுதி நீக்க நடவடிக்கையை திமுக மேற்கொண்டால் பார்த்து கொள்ளலாம் என கடிதம் அனுப்பி உள்ளார்.

துரை வைகோ புறக்கணிப்பா?

முதன்மை செயலாளர் துரை வைகோ, திருச்சியில் மிக முக்கியமான ஒருவரைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்துக்கும் துரை வைகோ, பொதுக்குழுவுக்கு வராமல்
போனதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்தியா கூட்டணியில் நீடிப்பா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய கட்சிகளில் மதிமுகவும் ஒன்று. இந்தியா கூட்டணியில் தொடருகிறோம். ஜூலை 8-ந் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.

வைகோ பேட்டி முழுமையாக

🔴 LIVE: வைகோ செய்தியாளர் சந்திப்பு நேரலை | Vaiko Press Meet LIVE  | MDMK | DMK

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share