ராஜினாமா செய்ய முடியாது.. வைகோவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. பகிரங்க எதிர்ப்பு!

Published On:

| By Mathi

Won’t Resign": MDMK MLA Openly Defies Vaiko

தமது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுகவின் சீர்காழி செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் திமு ராஜேந்திரன் வெற்றி பெற்றனர்.

ADVERTISEMENT

தற்போது திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிவிட்டது. இதனால் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ. இருவரையும் ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டார். ஆனால் 2 எம்.எல்.ஏ.க்களுமே வைகோவின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர்.

இன்றைய மதிமுகவின் பொதுக்குழுவிலும் 2 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இது தொடர்பாக கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: அன்புத் தலைவர் வைகோ அவர்களே உங்களை உண்மையாக நேசிக்கிறேன்… கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச்செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ அவர்கள் மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம்..

தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள்.

ADVERTISEMENT

எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்து இருப்போம். தவிர, கூட்டணி குறித்து தாங்களும்,கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன்..

மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் நேற்று (26.06.2026) பிற்பகல் 2 மணிக்கு தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன்…

அதன் பின்னர் இரவு தலைவர் வைகோ அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன்.

42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது… அதேபோல் “வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது.. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து..

தலைவர் அவர்களே! எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது… இவ்வாறு திமு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share