அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தாம் போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதில் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தாம் போட்டியிட இருப்பதாக ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சீமான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சீமானுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பொதுவேட்பாளராக நிறுத்துமா? என்கிற விவாதங்களும் எழுந்துள்ளன.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக அதிக இடங்களை பெற்ற போதும் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை. அந்த நிலையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக முன்வந்ததாக சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் சீமானை திமுக, அதிமுக ஆகியவை ஆதரிக்குமா? என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக அதிக முறை வென்றுள்ளது. 2016, 2021, 2026 தேர்தல்களிலும் அதிமுகதான் வென்றது.
அம்பாசமுத்திரம் தொகுதியில்,
2016-ல்
அதிமுக முருகையா பாண்டியன் 78,555
திமுக ஆவுடையப்பன் 65,389
சிபிஎம் கற்பகவல்லி 13,690
பாஜக சசிகலா 4,711
நாம் தமிழர் கட்சி தென்னரசு 1,778 வாக்குகளைப் பெற்றனர்.
2021-ல்
அதிமுகவின் இசக்கி சுப்பையா 85,211
திமுகவின் ஆவுடையப்பன் 68,296
நாம் தமிழர் கட்சியின் செண்பகவள்ளி 13,735 வாக்குகளைப் பெற்றனர்.
2026 தேர்தலில்
அதிமுகவின் இசக்கி சுப்பையா 65,589
காங்கிரஸின் விபி துரை 55,344
தவெக ராஜகோபால் 53,611
நாதகவின் சிவசங்கரன் 14,906 வாக்குகளைப் பெற்றனர்.
அதிமுக, திமுக இரு கட்சிகளுமே பலமாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் இரு கட்சிகளின் ஆதரவுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக போட்டியிட்டால் களம் கடும் போட்டியாக இருக்கும்.
