திரைக்கதை மன்னனாக, புகழ் பெற்ற இயக்குநராக புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்த பாக்யராஜின் அரசியல் பயணம் வெற்றிகரமானதாக இல்லாமல் போனது துயரம்.
எம்ஜிஆரால் தமது கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ். எம்ஜிஆர் மறைவுக்கு அண்ணா திமுக, இரண்டாக பிளவுபட்டது. அந்த தருணத்தில் 1989-ல் எம் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் பாக்யராஜ். ஆனால் பாக்யராஜின் இந்த தனி கட்சி பயணம் வெகு சீக்கிரமாகவே முடிவுக்கும் வந்துவிட்டது.
தனிக்கட்சி யாத்திரையை முடித்து வைத்துவிட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அங்கேயும் நீண்ட காலம் நீடிக்காமல், 2006-ம் ஆண்டு கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார் பாக்யராஜ்.
திமுகவிலும் நீண்டகாலம் பயணிக்காத பாக்யராஜ் அரசியலில் இருந்தே ஒதுங்கி நின்றார்.
கடந்த 2022-ல் சென்னையில் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பாக்யராஜ் புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையானது. அந்நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை. ஆனால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடி ஜி-க்கு நான் ஒரு ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு வாயும் சரியாக இயங்கவில்லை.. காதும் சரியாக கேட்கவில்லை” என பேசியதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் பாக்யராஜ். பின்னர் இந்த பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் பாக்யராஜ்.
2022-ல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே பிரச்சனை வெடித்த போது ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசிய பாக்யராஜ், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடாமல் போனது.
அரசியலில் கே.பாக்யராஜ் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும் பின்னடைவாகத்தான் இருந்தது. ஆனாலும் திரை உலகில் அவர் பதித்த தனித்த அழியாத முத்திரை காலந்தோறும் ஜொலித்து கொண்டே இருக்கும்.
