வைகோவுடன் மோதல்- திமுகவில் இணையும் 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Mathi

Conflict with Vaiko: Two MDMK MLAs Set to Join DMK

மதிமுக (MDMK) எம்.எல்.ஏ.க்களான சீர்காழி செந்தில் செல்வன், கடையநல்லூர் திமு ராஜேந்திரன் இருவரும் இன்று திமுக (DMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக 4 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சீர்காழியில் செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூரில் திமு ராஜேந்திரன் வெற்றி பெற்றனர்.

ADVERTISEMENT

சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகனும் மதிமுக முதன்மை செயலாளருமாகிய துரை வைகோ ஆகியோர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக எம்.எல்.ஏ. சீர்காழி செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

இது தொடர்பாக கருத்து தெரிவித்த செந்தில் செல்வன், ”மதிமுகவில் இருந்து விலகி திமுகவின் அடிப்படை உறுப்பினரானதாலேயே சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன்; மதிமுகவின் உயர்நிலைக் குழு உறுப்பினர் இல்லை” என கூறியிருந்தார்.

ஆனால் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் கடையநல்லூர் திமு ராஜேந்திரன் நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

ADVERTISEMENT

வைகோவுடன் மோதல் (VAIKO)

இந்தக் கூட்டத்தில் பேசிய வைகோ, எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் திமு ராஜேந்திரன், “6 மாதங்கள் கழித்து ராஜினாமா செய்வது குறித்து முடிவெடுக்கலாம்” என மறுப்பு தெரிவித்தார். இதனால் வைகோவுக்கும் திமு ராஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் நேற்று மாலை முதல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார் திமு ராஜேந்திரன்.

இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதிமுகவின் எம்.எல்.ஏ.க்களான செந்தில் செல்வனும் திமு ராஜேந்திரனும் திமுகவில் இணைய உள்ளனர்.

இது தொடர்பாக மதிமுக தரப்பில் விசாரித்த போது, “தவெக கூட்டணியில் சேர வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் தொடர்ந்து பேசி வருகிறார். சட்டசபை தேர்தலில் செலவு செய்த தொகையைகூட கொடுத்துவிடுகிறோம். எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் எனவும் வைகோவிடம் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். இதனடிப்படையில்தான் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைகோ சொன்னார். ஆனால் இருவருமே அதனை ஏற்க மறுத்துவிட்டனர் என்கின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share