தமிழக மாணவர்களுக்கு ஜாதி பெயருடன் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன், “ மாணவர்களுக்கு ஐடெண்டிட்டி கார்டு என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளையும் மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டையில், மாணவர் பெயர், முகவரி, மாணவரின் ஜாதி சான்றிதழ் விவரம், பிளட் குரூப், ஆதார அட்டை, தொலைபேசி எண் அனைத்தும் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”மாணவர்களுக்கான அடையாள அட்டையில் ஜாதி சான்றிதழ் இணைக்கப்பட மாட்டாது; எல்லா ஜாதி, மதமும் ஒன்றுதான். மாணவர்களைப் பற்றிய அடிப்படை தகவலை கொண்ட அடையாள அட்டை வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.
இதேபோல அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோரும் அமைச்சர் செங்கோட்டையனின் பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என விளக்கம் தந்துள்ளனர்.
